பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை228

184.குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
185.யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள்; - மாசில்சீர்ப்
186.பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்; - மாதார்ந்த
187.பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழ்நல்
188.கண்அவனை அல்லாது காணா செவியவன(து)
எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகேளா - அண்ணல்
189.கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் - றெழிலுடைய

முறையே ‘நீர், வஞ்சனை’ என இருபொருளையும் ‘சலஞ்சலம்’ என ஒருமொழியாய் ‘ஒருவகைச் சங்கு’ என வேறு ஒரு பொருளையும் தருதலால் சிலேடை வஞ்சனை, ஆடவரை நோக்காதது போல நோக்குதல். மகளிர் கண்களைக் கருமையும் விசாலமும், அலைவும் பற்றிக் கடலோடு ஒப்புமை கூறுதற்கு ஏற்ப, அவை சலஞ்சலமும் உடையவாயின என நயம்படக் கூறியவாறு.

கண்ணி - 184, 185: மதிமுகம், வினைத்தொகை. அலம்ப - ஒலிக்க. நாறுதல் - இயற்கையில் நாறுதல். வாசிகை - நெற்றிப் பட்டம்.

கண்ணி - 186: பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரையில், “கேசம்” என்பதன் பின் ‘அந்தம்’ என்பது தொகுக்கப்பட்டது. பழிப்பின்மை, அதன் எதிர்மறையாகிய புகழ் உடைமையைக் குறித்தது. சீத அரி - குளிர்ந்த புகை. குளிர்ச்சி. இங்கு நறுமணத்தின் மேற்று.

கண்ணி - 186, 187: மாது ஆர்ந்த - அழகு நிறைந்த. இதனை, “சொல்லார்” என்பதன் பொருளாகிய தோழியர்க்கு அடையாக்குக. ‘பல்லாண்டினால் ஏத்த’ என்க. “பல்லாண்டு” என்பது காரிய ஆகுபெயராய், அதனை உணர்த்தும் சொல்லைக் குறித்தது.

கண்ணி - 188, 189: இந்த இரு கண்ணிகளையும் ஒன்றிணைக்க ஒரு நேரிசை வெண்பாவாம். இவ்வெண்பாவை இவள் தானே பாடினாளாக நாயனார் அருளிச் செய்தார். ‘அழல் அங்கை கொண்டான் மாட்டு அன்பு அஃது’ என இயைத்து முடிக்க. “அஃது” என்பது அத்தன்மைத்தாய் இருத் தலைக் குறித்தது. ஆல், அசை.