பக்கம் எண் :

231கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

9. கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

வெண்பா
திருச்சிற்றம்பலம்

300.சொல்லும் பொருளுமே தூத்திரியும், நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று.

1


300. களப்பிரர் ஆட்சியின் இறுதிப் பகுதியில் சிவபெருமானது திருவருளால் மூர்த்தி நாயனார் பாண்டி நாட்டை மும்மையால் அரசாண்டார் அவரால் புரக்கப் பெற்ற சைவத் தமிழ்ச் சங்கப் புலவர்களும் பழைய தமிழ்ச் சங்கத்தில் இருந்த நக்கீரர், கபிலர், பரணர் முதலிய பெயர்களைப் பூண்டிருந்தனர். இவர்களையே நம்பியாரூரர் "பொய்யடிமையில்லாத புலவர்" என அருளிச் செய்தார். அதனால் இவர்கள் 'நாயன்மார்' எனப்பட்டனர். இவர்கள் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்பியாண்டார் நம்பிகள் பதினொன்றாம் திருமுறையுட் கோத்தார். இச்சங்கத்தில் இருந்த நக்கீரரே சிவபெருமான் அருளிச்செய்த "கொங்கு தேர் வாழ்க்கை" எனத் தொடங்கும் பாட்டிற்குக் குற்றங் கூறிவாதாடிப் பின் திருந்தித் தாம் செய்த பிழைக்கு இரங்கிச் சிவபெருமான்மேல் பல பிரபந்தங்களை அருளிச் செய்து உய்தி பெற்றார். திருக்காளத்தியில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருக் கணநாதேசுரரும், இறைவி ஞானப்பூங்கோதையும் இவர்தம் ஆன்மார்த்த மூர்த்திகள். திருக்காளத்தி தென்கயிலையாய் விளங்குதலால் கயிலைக்கு ஒரு வெண்பாவும், காளத்திக்கு ஒரு வெண்பாவுமாக மாறி மாறி வர நூறு வெண்பாக்களால் ஆகிய அந்தாதிப் பிரபந்தத்தை அருளிச் செய்தார். இவ்வரலாற்றைத் திருவிளையாடற் புராணம், சீகாளத்திப் புராணம் முதலிய இலக்கியங்களில் காண்க.

குறிப்புரை: "பெற்று" என்பதை "விளக்கா" என்பதன்பின் கூட்டுக. 'ஆக' என்னும் உருவக உருபு ஈறு குறைந்து நின்றது. வெண்பாவை விளக்காகக் கூறியது புற இருளைப் போக்கும் விளக்குப்போல அக இருளாகிய அஞ்ஞானத்தை நீக்குதல் பற்றி. அதனால், இப்பிரபந்தத்தால் பெறும் பயன் அஞ்ஞான இருள் நீங்க, மெய்ஞ்ஞான ஒளியைப் பெறுதலாயிற்று. இடிஞ்சில் - அகல்.