பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை232

301.பெற்ற பயன்இதுவே யன்றே, பிறந்தியான்;
கற்றவர்கள் ஏத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவம் சூழ்ந்தணிந்த அம்மானுக்(கு)
ஆளாகப் பெற்றேன் அடைந்து.

2

302.அடைந்துய்ம்மின் அம்மானை; உம்ஆவி தன்னைக்
குடைந்துண்ண எண்ணியவெங் கூற்றங்கு - அடைந்துநும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்(து)
அண்ணலே கண்டீர் அரண்.

3


எரிகின்ற திரிக்கு முதல் நெய்யாதல்போல விளங்குகின்ற சொல்லுக்கு முதல் பொருளாதல் பற்றி அவற்றை முறையே திரி நெய்களாகவும், நெய்யிற் பொருந்தி எரியும் திரிக்கு நிலைக்களன் அகலாதல் போலப் பொருளை விளக்கும் சொல்லுக்கு நிலைக்களன் நாவாதல் பற்றி அதனை அகலாகவும் திரி, நெய், அகல் இம்மூன்றானும் தோன்றுவது (ஒளிர்வது) விளக்காதல் போலச் சொல், பொருள், நா இம்மூன்றானும் தோன்றுவது இப்பிரபந்த வெண்பாக்கள் ஆதல்பற்றி அவற்றை விளக்காகவும் உருவகித்தார். சிவனுக்குச் செய்யும் திருப்பணிகளுள் திருவிளக்கேற்றும் பணி சிறப்புடைத்து. எனினும் புற இருளை நீக்கும் விளக்கை ஏற்றுதலிலும் அக இருளை நீக்கும் இவ்விளக்கை ஏற்றியது மிகச் சிறந்த பணியாதலை யறிக. வியல் - அகலம். அஃது உரிச் சொல் ஆதலின், அதன் ஈற்று லகரம் னகரமாய்த் திரிதல் புறநடையாற் பெறப்படும்.

301. குறிப்புரை: 'யான் பிறந்து பெற்ற பயன் இதுவே' என மாற்றி, அதனை இறுதியிற் கூட்டுக. 'அம்மானையடைந்து அவனுக்கு ஆளாகப் பெற்றேன்' என்க. கொற்றவர் - அரசர்; உடையவர். "ஆடு அரவம்", வினைத் தொகை. "சூழ்ந்து" என்பதன்பின் 'இருக்க' என ஒரு சொல் வருவிக்க. அன்றி, "சூழ்ந்து" என்பதனைப் பிறவினையாகக் கோடலும் ஆம். ஆகம் - உடம்பு. அது முதலாகு பெயராய் அதன் உறுப்பைக் குறித்தது. 'ஆடு அரவத்தைத் தோளாகிய ஆகத்தில் சூழ்ந்து இருக்க அணிந்த அம்மான்' என்றபடி.

302. 'அவ்வம்மானை அடைந்து உய்ம்மின்' எனச் சுட்டு வருவித்து மாற்றி, இறுதிக்கண் கூட்டி யுரைக்க. "அடைந்து" என்றது, 'அதற்கு முன்னே அடைந்து' என்றபடி. எனவே, 'அதற்குமுன்னே' என்பது சொல்லெச்சமாம். குடைதல் உள்ளகத்துப் பற்றின்றி நீங்க வாங்குதல். உண்ணுதல், அழித் தலைக் குறிக்கும் இலக்கணச் சொல் அங்கு - உண்ணுதற் குரிய காலத்தில். "நுங்கண்" என்பதில் கண், ஏழன் உருபு. 'எண்ணிய கூற்று, எண்ணியதனை முடிக்க உள்ளிடத்தைப் பார்க்கும் என்க. கண்டீர், முன்னிலையசை. அரண் - பாதுகாப்பு.