பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை234

306.உருவு பலகொண் டுணர்வரிதாய் நிற்கும்
ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய
பூக்கயிற்கொண் டெப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்சும்
மாக்கயிலை என்னும் மலை.

7

307.மலைவரும்போர் வானவரும், தானவரும் எல்லாம்
அலைகடல்வாய் நஞ்செழல்கண் டஞ்சி - நிலைதளரக்
கண்டமையால் தண்சாரற் காளத்தி ஆள்வார்நஞ்(சு)
உண்டமையால் உண்டிவ் வுலகு.

8



ஒருவடிவே யன்று' (இருவடிவு) என்பதாம். இமம் - பனி. அஃது ஆகுபெயராய், அதனை உடைய மலையைக் குறித்தது. நீள் கோடு - உயர்ந்த சிகரங்கள். இது 'பனி' என்னும் ஆகுபெயரைச் சிறப்பியாது, அதன் பொருளைச் சிறப்பித்தலின், "நீள் கோட்டு இமம்" என்றது, இருபெயரொட்டு ஆகுபெயர், அல்லது பின்மொழி யாகுபெயர். இமவான் - இமமலையைத் தனதாக உடையவன்; மலையரையன். மடம் - இளமை தன், சாரியை. "ஆனால்" என்பது தெளிவின்கண் வந்தது.

306.குறிப்புரை: "கொண்டு" - என்பது, 'கொள்ளுதலால்' எனக் காரணப் பொருளில் வந்த செய்தென் எச்சம் "அரிது" என்பது அப்பண்பின்மேல் நின்று ஆகுபெயராய் அதனை உடையானைக் குறித்தது. பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவங்களுடன் தோன்றுதலால், அவனை, இன்ன உரு உடையன்' என அறுதியிட்டுணர்தல் அரிது' என்பதாம். பால் - இடம் 'ஒருபால் ஆக' என ஆக்கம் விரிக்க. இருக்கை - இருக்குமிடம். மரு - நறுமணம். 'கையில்' என்பது 'கயில்' எனப் போலியாய் வந்தது.

307.குறிப்புரை: மலைவு அரும் போர் - வேறு இரு திறத்தினர் செய்தற்கரிய போர். அதனையுடையார் வானவரும், தானவரும், 'மலைவரும்போல்' என்பது பாடம் அன்று. 'வானவரும், தானவரும் ஆகிய எல்லாரும்' என்க. எனவே எஞ்சினார் ஒருவரும் இல்லையாயிற்று. "எல்லாம் அஞ்சி நிலை தளர" என்றது, உலகம் நிலையாது அழியும் நிலைமை தோன்றியதைக் குறித்தவாறு. 'அந்நிலைமையைக் கண்ட காரணத்தால் அவர்கள்மேல் அருள் மீக்கூரச் சிவபெருமான் நஞ்சினை உண்டான்' என்றற்கு, "கண்டமையால் நஞ்சு உண்டமையால்" என்றார். 'காளத்தி ஆள்வார் நஞ்சு உண்டமையாலே இவ்வுலகு உளதாயிற்று' என்பது இனிது விளங்குதற்பொருட்டு முன் இரண்டு அடிகளைக் கூறினார். "உலகு" என்றது உயிர்த் தொகுதியை 'உண்டாயிற்று' என ஆக்கம் வருவிக்க.