315. | நிலையில் பிறவி நெடுஞ்சுழியிற் பட்டுத் தலைவ தடுமாறு கின்றேன்; - தொலைவின்றிப் போந்தேறக் கைதாராய்; காளத்திப் புத்தேளிர் வேந்தே,இப் பாசத்தை விட்டு. | | 16 |
316. | பாசத்தை விட்டுநின் பாதத்தின் கீழே,என் நேசத்தை வைக்க நினைகண்டாய்; - பாசத்தை நீக்குமா வல்ல கயிலாயா, நீஎன்னைக் காக்குமா(று) இத்தனையே காண். | | 17 |
உறுவார் ஒருத்தர்க்கு' எனப் பின்முன்னாக வைத்து, உருபினை மாறிக் கூட்டுக. அறிவான் - அறிதற்கு. உறுவார் - முயல்வார், "நிலை அறியுமாறு உண்டோ' என் முன்னே கூட்டி முடிக்க. "நெறி" என்பது, "சடை" என்பதனோடு, 'நெறித்த' என இறந்த கால வினைத்தொகைப் பொருட்டாய்த் தொக்கது. நெறித்தல் - மேடும், பள்ளமுமாய், நீண்டு வளர்தல். வார் - நீண்ட, உரிச்சொல். "சடையாய்" என்பது, முன்னிலை வினைக் குறிப்புப் பெயர். 'சடையாயது நிலை' என ஆறாவது விரிக்க. 'நிலையை' என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. தகுதி யில்லார்க்கு ஓரிடத்தும் காணப்படாது, தகுதி யுடை யார்க்கும் திருக்கயிலையே காணப்படுகின்றாய். என்றால், 'இவ்வுலகிலே உன்னைக் கண்டுவிடலாம்' என நினைதல் எங்ஙனம் கூடும் -என்பதாம். 315. குறிப்புரை:" புத்தேளிர் வேந்து" என்பது, 'சிவன்' என்னும் ஒருசொல் தன்மைத்தாய் நின்றது. "தலைவ" என்பதனையும் "வேந்தே" என்பதன் பின்னர்க் கூட்டுக. நிலை இல் பிறவி - ஒன்றாய் நில்லாது, பலவாய் விரைவில் மாறுபட்டு வரும் பிறவி. நெடுமை, பெருமை குறித்தது. சுழி - சுழல். தொலைவு இன்றி - அழிவு இல்லையாம்படி. 'கரை' என்பது வருவித்து, 'கரை போந்து ஏற' என்க. நீரில் வீழ்ந்தாரைக் கரையில் நிற்போர் கைகொடுத்தே கரையேற்றுவர் ஆதலின், "கை தாராய்" என்றார். 'இப்பாசத்தை விட்டுப் போந்து ஏற' என்க. இப்பாசம், உலக வாழ்க்கை. 316. குறிப்புரை: நேசம் - அன்பு. "பாசத்தை விட்டு" என்றது, 'பாசத்தின்மேல் நேசத்தை வைத்தலை விடுத்து' என்றபடி. எனவே, "பாசம்" என்றது உடம்பினையும், அதனோடு தொடர்புபட்ட பொருள்களையும் ஆயிற்று. "கீழ்" என்றது ஆகுபெயராய். 'நிழல்' எனப் பொருள் தந்தது. 'கீழின் கண்ணே' என ஏழாவது விரிக்க. ஏகாரம், பிரிநிலை. 'நீக்குமாறு' என்பது கடைக்குறைந்தது செய்யுள் முடிபு. 'நினை' என்றதனால். 'நீ நினையாவிடில் அது கூடாது' என்பதும், 'நினையின் தப்பாது கூடும்' என்பதும் பெறப்பட்டன.
|