பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை240

317.காணா தலக்கின்றார் வானோர்கள், காளத்திப்
பூணார மார்பன்றன் பொற்பாதம்; - நாணாதே
கண்டிடுவான் யான்இருந்தேன், காணீர், கடல்நஞ்சை
உண்டிடுவான் றன்னை ஒருங்கு.

18


318.ஒருங்கா(து) உடனேநின்(று) ஓர்ஐவர் எம்மை
நெருங்காமல் நித்தம், ஒருகால் - நெருங்கிக்
கருங்கலோங் கும்பற் கயிலாயம் மேயான்
வருங்கொலோ நம்பால் மதித்து.

19


"இத்தனையே" என்றது, 'இஃது ஒன்றே அனைத்தையும் தரும்' என்பதுபற்றி காண். முன்னிலை யசை.

317. குறிப்புரை: இவ்வெண்பாவினை, "அன்பரீர்" என, அடியவரை முன்னிலைப் படுத்து உரைக்க. 'காளத்தியான் பாதம் காணாது வானோர்கள் அலக்கின்றார்' யான் நாணாதே அவனை ஒருங்கு காண இருக்கின்றேன்' என இயைத்து உரைக்க. காணீர், முன்னிலையசை. அலக்கின்றார் - அலமரு கின்றார். ஆரம், பாம்பாகிய ஆரம், பொற்பாதம், உவமத் தொகை. நாணுதலினின்றும் பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை. "உண்டிடுவான்" என்றது, 'உண்ண வல்லவன்' என்றபடி. மேல், "பூண் ஆர மார்பன்" என்றமையால், "கடல் நஞ்சை உண்டிடு வான்" என்றது 'அவன்' எனச் சுட்டளவாய் நின்றது. ஒருங்கு - முற்றும். 'ஒருங்கு கண்டிடுவான்' என மேலே கூட்டி முடிக்க. கண்டிடுவான், வான் ஈற்று வினையெச்சம். "இருந்தேன்" என, முக்கால வினை இறந்த காலத்தில் வைத்துச் சொல்லப்பட்டது 'வானவர் பாதத்தையே காணாது அலக்கின்றார்; யான் நாணாதே முற்றுங்காண இருக்கின்றேன்' என்றதனால், 'இஃது என் அவா இருந்தவாறு' என்பது குறிப்பெச்சமாயிற்று. 'ஆசை வெட்கம் அறியாது' என்பது பழமொழி.

318. குறிப்புரை: ஒருங்காது - ஒரு முகப்படாமல் (அவரவர் விரும்பியபடியே). உடனே - கூடவே. ஐவர், ஐம்புல வேடர். "நெருங்குதல்" இரண்டில் முன்னது வலிசெய்து வருந்துதல்; பின்னது கிட்டுதல். நித்தம் - நாள்தோளும். கருங்கல் - கரிய மலை. 'கருங்கல்போல ஓங்கும் உம்பல்களையுடைய கயிலாயம்' என்க. உம்பல் - யானை.

'ஓர் ஐவர் (எம்) உடனே நின்று, எம்மை நித்தம், ஒருங்காது நெருங்காமல், கயிலாயம் மேயான் நம்பால் (நம்மை) மதித்து ஒருகால் நெருங்கி வருங்கொலோ' என இயைத்து முடிக்க.