| 319. | நம்பால் மதித்துறையும் காளத்தி நண்ணாதே வம்பால் மலர்தூய் வணங்காதே, - நம்பா,நின் சீலங்கள் ஏத்தாதே தீவினையேன் யானிருந்தேன்; காலங்கள் போன கழிந்து. | | 20 |
| 320. | கழிந்த; கழிகிலாய்; நெஞ்சே, கழியாது ஒழிந்தநாள் மேற்பட் டுயர்ந்தோர் - மொழிந்தசீர்க் கண்ணுதலான் எந்தை கயிலாய மால்வரையை நண்ணுதலாம் நன்மை நமக்கு. | | 21 |
| 321. | நமக்கிசைந்த வாநாமும் ஏத்தினால், நம்பர் தமக்கழகு தாமே யறிவர் - அமைப்பொதும்பின் கல்லவாம் நீடருவிக் காளத்தி யாள்வாரை வல்லவா, நெஞ்சமே, வாழ்த்து. | | 22 |
ஒருங்காது வருத்துதலாவது, ஐவரும் ஒரு பெற்றியாக வருத்தாது, அவரவர் வேறு வேறு வகையாக வருத்துதல். “நெருங்காமல்” என்பது, 'நெருங்க' என எதிர்காலப் பொருட்டாய் வரும் செயவென் எச்சத்தின் மறை, 'நெருங்காதபடி' என்பது பொருள். கொல், ஐயஇடைச் சொல், ஓகாரம் அசை. “உடனே” என்னும் ஏகாரம் வேறு நிற்றலினின்றும் பிரித்தலின் பிரிநிலை, மதித்து - பொருட் படுத்துதலைச் செய்து. 319. குறிப்புரை: “நம்பால்” என்பது 'எம்பால்' என்னும் பொருட்டாய் நின்றது. “மதித்து” என்பதற்கு, மேல் உரைத்தது உரைக்க. 'நீ உறையும் காளத்தி' என்க. வம்பு ஆர் - மணம் நிறைந்த. சீலங்கள் - குணங்களும், செயல்களும். ஏத்துதல் - புகழ்தல் 'தீவினையேனாகிய யான்' என்க. இருந்தேன் - வாளா இருந்தேன். காலங்கள், நாள்கள், 'போயின' என்பது இடைக் குறைந்து நின்றது. 'கழிந்து போயின' என்க. 'இனி இரங்கிப் பயன் என்' என்பது குறிப்பெச்சம் 'மேற்கூறியன பலவும் காலம் உள்ள பொழுதே செய்யத் தக்கன' என்பது கருத்து. 320. குறிப்புரை: “கழிந்த கழிகிலாய்” என்பதை இறுதியிற் கூட்டுக. கழியாது ஒழிந்தநாள் - வாளா கழியாது; உறுதி செயச் சென்ற நாள்கள். 'நாள்களில்' என ஏழாவது விரிக்க. “மேற்பட்டு உயர்ந்தோர்” என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் நின்றது. 'கயிலாய மால்வரையை நண்ணுதல் நமக்கு நன்மையாம்; ஆயினும் நாள்கள் கழிந்தன. நீ இருந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்திலை' என்க. 321. குறிப்புரை: 'நெஞ்சே, அமைப் பொதும்பின்' எனத் தொடங்கியுரைக்க. அமை - மூங்கில். பொதும்பு - மரச் செறிவு.
|