| 322. | வாழ்த்துவாய்; வாழ்த்தா தொழிவாய்; மறுசுழியிட்டு ஆழ்த்துவாய்; அஃதறிவாய் நீயன்றே! - யாழ்த்தகைய வண்டார் பொழிற்கயிலை வாழ்கென் றிருப்பதே கண்டாய் அடியேன் கடன். | | 23 |
'மூங்கிலையுடைய மரச் செறிவையுடைய காளத்தி' என்க. இன், சாரியை; கல்லவாம் 'கல்' என்னும் ஓசையை உடைய அருவி, வல்லவா - இயன்ற அளவு. (ஏன் எனில்,) நம்பர் தமக்கு அழகு தாமே அறிவர் - சிவபெருமான் தாம் செய்யத் தக்கதைத் தாமேயறிவார்; நாம் அவருக்குத் சொல்லத் தேவையில்லை. அஃது, 'இவரால் இயன்றது இவ்வளவுதான். ஆகவே, இவர்க்கு வேண்டுவதை நாம் அருள வேண்டுவதுதான்' என்பது. “இசைந்தவா” என்பதும், 'இயன்ற அளவு' என்றதேயாம். “நமக்கு இசைந்தவா நாமும் ஏத்தினால்” என்றது அனுவாதம். உம்மை, 'அவரும் அறிந்து செய்வார்' என எதிரது தழுவிற்று. 'தன் கடன் அடியேனையும் தாங்குதல்'1 என அருளிச் செய்தமை காண்க. 'இறைவனது பெருமையை முற்ற அறிந்து வாழ்த்துவார் ஒருவரும் இல்லை. அதனால், அவரவரும் தாம் தாம் அறிந்த அளவில் வாழ்த்துதல் வேண்டும்' என்பது கருத்து. 322. குறிப்புரை: வாழ்த்துதல் - வாழப் பண்ணுதல். வாழ்த்தாதொழிதல் - வாழப் பண்ணுதலைச் செய்யாமை. சுழி - சுழல். மறு சுழி - ஒன்றின்மேல் மற்றொன்றாய் வரும் சுழல். 'சுழியின்கண்' என ஏழாவது விரிக்க அஃது - மேற் கூறிய மூன்றனுள் செய்யத் தக்கது. அறிவாய் நீ அன்றே - அறிபவன் நீயேயல்லது, பிறர் யார்! 'பிறர் ஒருவரும் இல்லையாதலின், உனக்கு அதனை அறிவிப்பாரும் இல்லை' என்பது கருத்து. ஒன்றனைச் 'செய்தல், செய்யாமை, வேறொன்று செய்தல்' என்னும் இம் மூன்றனுள் ஒன்றைத் தான் விரும்பிய வண்ணம் செய்பவனே முதல்வன் (கருத்தா) ஆவன்; அத்தகைய முதல்வன் நீயே - என்பார் இங்ஙனம் மூன்று வகையாகக் கூறினார். இம்மூன்றும் முறையே, 'கர்த்திருத்வம், அகர்த்ருத்வம், அந்யதாகர்த்திருத்தவம்' - என வடமொழியில் சொல்லப்படும். இம்மூன்றையும் குறிக்கும் முறையில்தான் ஒளவையார், 'ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும்; - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனைஆளும் ஈசன் செயல்.'2
1. திருமுறை - 5.19.9. 2. நல்வழி
|