| 323. | கடநாகம் ஊடாடும் காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க் கில்லை; - இடம்நாடி இந்நாட்டிற் கேவந்(து)இங்(கு) ஈண்டிற்றுக் கொண்டுபோய் அந்நாட்டில் உண்டுழலு மாறு. | | 24 |
| 324. | மாறிப் பிறந்து, வழியிடை யாற்றிடை ஏறி யிழியும் இதுவல்லால், - தேறித் திருக்கயிலை ஏத்தீரேல், சேமத்தால் யார்க்கும் இருக்கையிலை கண்டீர் இனிது. | | 25 |
எனக் கூறினார். 'உலகியல் என்னும் வெள்ளத்திலிருந்து என்னை எடுத்துக் கரையேற்று' என்றோ, 'வேண்டா; கரை யெற்றாதே' என்றோ, 'மேலும் ஆழத்தில் அமிழ்த்திவிடு' என்றோ உனக்கு விதிக்க நான் யார்? தக்கதை நீயே அறிந்து செய்வாயன்றோ - என்பது கருத்து 'யாழ்த் தகைய ஆக' என ஆக்கம் வருவிக்க. 'வண்டு ஆர்க்கும் பொழில்' என்க. ஆர்த்தல் - ஒலித்தல். (உன்கடனை நீ அறிவாய்.) 'கயிலை வாழ்க! கயிலாயன் வாழ்க!!' - என்பன போல இயன்ற அளவு உன்னை வாழ்த்தியிருத்தலே எனது கடன்; அதனை நான் செய்தல் வேண்டும். என்றபடி. “என் கடன் பணி செய்து கிடப்பதே”1 என்றமை காண்க. கண்டாய், முன்னிலை யசை. 323. குறிப்புரை: “இல்லை” என்பதை இறுதிக்கண் கூட்டுக. கடநாகம் - மதத்தையுடைய யானை. ஊடு ஆடும் - உள் இடங்களில் உலாவுகின்ற காளத்தி. கடனாக - கடமை யாக; நியமமாக. இடம் - பிறப்பெடுக்கும் இடம். இந்நாடு, மண்ணுலகம். ஈண்டிற்று - திரண்டது, வினைக் கூட்டம். வினை யாலணையும் பெயர்; சாதியொருமை, 'ஈண்டிற்றை' என இரண்டாவது விரிக்க. அந்நாடு, துவர்க்க நரகங்கள். மண்ணுலகம் வினைகளை ஈட்டும் இடம். அதனால் இதனை 'கரும பூமி' என்பர். சுவர்க்க நரகங்கள் வினைப் பயன்களை நுகரும் இடம் அதனால் அவற்றைப் 'போக பூமி' என்பர். சிவபெருமானை வணங்குவார் இந்த இருவகைப் பூமியிலும் செல்லாது சிவலோகத்தை அடைவர் ஆதலின், 'காளத்திக் கோனைக் கடனாகக் கைதொழுவார்க்கு இந்நாட் டிற்கு வந்து ஈட்டுதலும், அந்நாட்டிற் சென்று நுகர்தலும் இல்லை' என்றார். 324. குறிப்புரை: 'உலகீர்' என முன்னிலை வருவித்து, 'தேறித் திருக்கயிலை ஏத்திரேல்' என்பதை முதற்கண் கூட்டியும், 'யார்க்கும் சேமத்தால் இனிது இருக்கை இலை' என மாற்றியும் உரைக்க.
1. திருமுறை - 5.19.9.
|