பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை244

325.இனிதே பிறவி; இனமரங்கள் ஏறிக்
கனிதேர் கடுவன்கள் தம்மில் - முனிவாய்ப்
பிணங்கிவரும் தண்சாரல் காளத்தி பேணி
வணங்கவல்ல ராயின் மகிழ்ந்து.

26



தேறி - (உயர்ந்தோர் சொல்லைத்) தெளிந்து. 'இடை' இரண்டும் ஏழன் உருபு. மாறிப் பிறத்தல், உயர் பிறவியிலும், தாழ் பிறவியிலும் மாறி மாறிப் பிறத்தல். வழி - இனிது செல்லும் வழி. யாறு - வெள்ளத்தில் அகப்பட்டு அல்லல் உறும் யாறு. 'வழியிடை ஏறி, யாற்றிடை, இழியும்' என நிரல்நிறை யாகக் கொள்க. முன்னது உயர் பிறப்பிற் பிறத்தலையும், பின்னது தாழ் பிறப்பிற் பிறத்தலையும் குறித்தன. வெள்ளத்தில் அகப்பட்டவர்க்கே யன்றி. இருக்கும் இடம் இன்றி, ஓயாது வழி நடப்பார்க்கும் உறதாவது அல்லலேயன்றி அமைதி யன்று. அதனால் இரண்டுமே துன்பமாம். சேமம் - பாதுகாவ லோடு கூடிய, வாழும் இடம். "காலத்தினாற் செய்த நன்றி"1 என்பதுபோல, "சேமத்தால்" என்பது வேற்றுமை மயக்கம். இருக்கை - அமைதியுடன் இருத்தல்; தொழிற் பெயர். கண்டீர், முன்னிலை யசை. 'சிவபெருமானைத் துதிப்பார்க்கல்லது அமைதி கிட்டாது' என்றபடி.

'தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தாற் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.'2

என்னும் பொது மறையையும் காண்க.

325. குறிப்புரை: 'பிறவியே இனிது' என ஏகாரத்தை மாற்றி வைத்து, இறுதிக்கண் கூட்டுக. வீட்டினின்றும் பிரித்தலின் ஏகாரம், பிரிநிலை. இனம் - பல்வேறு இனம். 'தேர் கடுவன்கள் ஏறித் தம்மில் பிணங்கி வரும் சாரல் காளத்தி' என்க. கடுவன் - ஆண் குரங்கு. முனிவு - கோபம் (மக்கள்) காளத்தி பேணி மகிழ்ந்து வணங்க வல்லராயின் (அவர்கட்கு) அப்பிறவியே இனிது - என்க. 'வீடு வேண்டா' என்பதாம். 'வீட்டின் பயன் அப்பிறப்பிலே உள்ளது' என்றபடி.

'தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்

திருநடம் கும்பிடப் பெற்று,

மண்ணிலே வந்த பிறவியே எனக்கு

வாலிதாம் இன்பமாம்.'3

என்றது காண்க.


1. திருக்குறள் - 102.
2. " - 7.
3. பெரிய புராணம் - தடுத்தாட்கொண்டது - 107.