தந்து, சிவன் வணங்கப்படுபவனும், உயிர்கள் அவனை வணங்குவனவும் ஆகின்ற முறைமையை உணர்த்தி நிற்கும். இது பொதுவாக யாவராலும் ஓதத் தக்கதாதல் பற்றி, 'தூய பஞ்சாக்கரம்' (பருவைந்தெழுத்து) எனவும், அஞ்செழுத்தும் அஞ்சு பதங்களாய் நின்று அஞ்சு பொருளை உணர்த்துதல் உபதேச முறையால் பெற்றுச் சிறந்தாரால் ஓதப் படுதலின் 'சூக்கும பஞ்சாக்கரம்' (நுண்ணைந்தெழுத்து) எனவும் சொல்லப்படும். முன்னது நகாரம் முதலாகவும், பின்னது சிகாரம் முதலாகவும் வரும். அஞ்செழுத்தும் அஞ்சு பதம் ஆதல் ஆணையாற் கொள் வதல்லது, வழக்கினாற் கொள்வதன்று. அதனால், 'இவை போல்வன வழக்குநூல் வரையறைக்கு உட்படா' என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார், 'மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே.'1 எனப் புறனடுத்தோழினார். அரு மறைகள் - பொருள் உணர்தற்கு அரிய இறைவன் நூல்கள். அந்நூல்களில் பரக்க வரும் பொருள் அனைத்தையும் இவ் அஞ்சுசெழுத்து அடக்கி நிற்றலின் "அஞ்செழுத்துமே அருமறைகள் ஆம்" என்றார். 'அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்.'2 எனவும், 'அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின் பொருள்நூல் தெரியப் புகின்.'3 எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க. கற்றல் - ஓதி யுணர்தல். "போய்" என்றது, 'நீங்கி' என்றபடி. 'நிறத்தொடு' என ஒடு உருபு விரிக்க. ஏகாரம், அசை. "ஆவனவும்" என்றதனோடு இயைப, 'அஞ்செழுத்தும் கற்க, நெறி அணித்தாதலும்' என எண்ணும்மை விரித்து,' 'இரண்டும் ஆகும்' என்க. ஆகும் முடியும். காளத்தியாருக்கும் காண்டற்கு அரிதாய், நீளத்தே நின்ற நெறியாவது, பகலவன் தனது கதிர்களைப் பரக்க வீசிய போதிலும் அவற்றை ஏற்க மாட்டாது இருளில் மூழ்கியிருக்கும் படலம் படர்ந்த கண்போலக் காளத்தி நாதர் தமது திருவருள் நோக்கினைச் செலுத்திய போதிலும் அதனை
1. தொல் - சொல் - எச்சவியல். 2. உண்மை விளக்கம் - 44. 3. திருவருட் பயன் - 81.
|