| 345. | நின்னியல்பை யாரே அறிவார், நினையுங்கால்! மன்னியசீர்க் காளத்தி மன்னவனே! - நின்னில் வெளிப்படுவ ஏழுலகும் மீண்டே ஒருகால் ஒளிப்பதுவுமா னால்; உரை. | | 46 |
போலாது, அவற்றின் வேறு பட்டதோர் இயல்பிற்று' என்பதாம். "காண்" என்றது, புதிதாகக் கண்டவர் அதனை முன்னமே கண்டவர்க்கு அறிவித்தல் போன்றதொரு வழக்கு. 'போல்வாய்' எனப்பாடம் ஓதலும் ஆம். 345. குறிப்புரை: "மன்னிய சீர்" என்பது முதலாகத் தொடங்கி, 'நினையுங்கால் நின்னியல்பை அறிவார்யாரே? உரை' என முடிக்க. மன்னியசீர் - நிலைபெற்ற புகழ். 'என்றும் நிலைபெற்றிருத்தலால் பெற்ற புகழ்' என்க. 'நின்னினின்றும் வெளிப்படுவனாகிய ஏழுலகும்' என உரைக்க. நின்னில், நீக்கப் பொருட்கண் வந்த ஐந்தாம் வேற்றுமை. இதனை ஏழாம் வேற்றுமையாக்கி, "ஒளிப்பதுவும்" என்பதனோடும் கூட்டுக. "மீண்டே ஒருகால்" என்றதனால், 'முன்பு ஒருகால் வெளிப்படுவ' என்பது வருவிக்க. 'ஏழுலகும் முன்பு ஒரு கால் நின்னினின்று வெளிப்பட்டு, மீண்டு ஒருகால் நின்னிடமே வெளிப்படுப ஆனால்' என ஓதற்பாலதனைச் செய்யுள் நோக்கி இவ்வாறு. ஓதினார் "நின்னில் வெளிப்படு ஏழுலகும்" என்பது உடம்பொடு புணர்த்தது. "ஒளிப்பது" என்பது தொழிற்பெயர். அஃது ஆகுபெயராய் அதனையுடைய உலகங்களின்மேல் நின்றது உம்மை, இறந்தது தழுவியது, "ஆனால்" என்பது தெளிவின்கண் வந்தது. 'தோன்றி ஒடுங்குபவனாகிய அனைத்துப் பொருள்கட்கும் இறைவன் நிலைக்களமாய் இருத்தலின், அவனது அளவை அத்தோன்றி ஒடுங்கும் பொருள்களில் ஒருவராய் உள்ள எவர் அறிதல் கூடும்? ஒருவரும் அறிதல் கூடாது' என்பதாம். 'தோன்றி ஒடுங்கும் பொருள்கள் அனைத்திற்கும் இறைவன் நிலைக்களம்' என்பதை மெய்கண்ட தேவர், "வித்துண்டா மூலம் முளைத்தவா"1 என விளக்கினார். இதனையே பிற்காலத்தில் பட்டினத்து அடிகளும், 'நுரையும், திரையும், நொப்புறு கொட்பும் வரையில் சீகா வாரியும் குரைகடல் பெருத்தும், சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி யிருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி, நின்னிடை அடங்கும், நீ ஒன்றினும் தோன்றாய், ஒன்றினும் அடங்காய்.'2 என அருளிச் செய்தார்.
1. சிவஞானபோதம் - சூ.1.அதி.2 2. கோயில் நான்மணி மாலை - 24.
|