| 358. | பெண்இன்(று) அயலார்முன் பேதை; பிறைசூடி, கண்நின்ற நெற்றிக் கயிலைக்கோன், - உண்ணின்ற காமந்தான் மீதூர நைவாட்குன் கார்க்கொன்றைத் தாமம்தா, மற்றிவளைச் சார்ந்து. | | 59 |
| 359. | சார்ந்தாரை எவ்விடத்தும் காப்பனவும் சார்ந்தன்பு கூர்ந்தார்க்கு முத்தி கொடுப்பனவும், - கூர்ந்துள்ளே மூளத் தியானிப்பார் முன்வந்து நிற்பனவும் காளத்தி யார்தம் கழல். | | 60 |
| 360. | தங்கழல்கள் ஆர்ப்ப, விளக்குச், சலன் சலன் என்(று) அங்கழல்கள் ஆர்ப்ப, அனலேந்திப் - பொங்ககலத்(து) ஆர்த்தா டரவம், அகன்கயிலை மேயாய்,நீ கூத்தாடல் மேவியவா, கூறு. | | 61 |
358. குறிப்புரை: 'பிறை சூடியே, கயிலைக் கோனே' என இரு விளிகளையும் முதற்கண் வைத்து, "பெண்" என்பதன்முன் 'என்' என்பதும், "பேதை" என்பதன்பின் 'ஆயினாள்' என்பதும் வருவிக்க. தான், அசை, மீதூர்தல் - புறத்தார்க்குப் புலனாகு மாறு மிகுதல் - எனவே, நாணழிந்தாளாம். தாமம் - மாலை. மற்று, அசை, சார்தல் - பக்கத்தே வருதல். இது "மாலையிரத்தல்" என்னும் துறை. தோழிமேல் வருவது இங்குச் செவிலி மேலதாய் வந்தது. இது தூதிடையாடலின்1 வகை. எனவே, பெருந்திணையாம். மெய்யுணர்வாசிரியர் மெய்யுணர் மாணாக்கர் பொருட்டு இறைவனையிரத்தல் இதன் உள்ளுறை. 359. குறிப்புரை: "அன்பு" என்றதை, 'அன்பு கூர்ந்து' என மீட்டும் கூட்டுக. மூளத்தியானித்தல் - ஆழத் தியானித்தல். 360. குறிப்புரை: "அகன் கயிலை மேயாய்" என்பதனை முதலிற் கொள்க. தங்கு அழல்கள் ஆர்ப்ப ஆங்காங்கு எரியும் நெருப்புக்கள் தம் ஒலியை எழுப்ப "சலன்சலன்" என்பது ஒலிக் குறிப்பு. அம் - அழகிய. 'விளக்குப் போலும் அனலை ஏந்தி' என இயைக்க. பொங்கு அகலத்து ஆடு அரவம் ஆர்த்து - அழகு மிகுந்த மார்பின்கண் படம் எடுத்து ஆடுகின்ற பாம்பைக் கட்டி, மேவியவா - விரும்பியவாறு. 'அரசர் முதலியோரை மகிழ்வித்துப் பொருளும், புகழும் பெற வேண்டுவார் செய்யும் செயலை நீ மேற்கொண்டவாறு ஏன்? அதனை நீ கூறு' என்பதாம் 'உனது இயல்புகளைக் கூத்துச் செய்கைகளால் உணர்த்திப் பக்குவிகளை ஆட்கொள்ளவே மேற்கொண்டாய் போலும்' என்பது குறிப்பு.
1. புறப் பொருள் வெண்பா மாலை - பெருந்திணைப் படலம்.
|