பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை264

363.காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே!
யாமுற்ற துற்றாய்; இருங்கடலே, - யாமத்து
ஞாலத் துயிரெல்லாம் கண்துஞ்சு நள்ளிருள்கூர்
காலத்தும் துஞ்சாதுன் கண்.

64

364.கண்ணும், கருத்துங் கயிலாய ரேஎமக்கென்(று)
எண்ணி யிருப்பன்யான் எப்பொழுதும்; - நண்ணும்
பொறியா டரவசைத்த பூதப் படையார்
அறியார்கொல்! நெஞ்சே, அவர்.

65

365.நெஞ்சே, அவர்கண்டாய், நேரே, நினைவாரை
அஞ்சேல்என் றாட்கொண் டருள்செய்வார்; - நஞ்சேயும்
கண்டத்தார், காளத்தி ஆள்வார் கழல்கண்டீர்
அண்டத்தார் சூடும் அவர்.

66


காரணப் பொருளில் வந்த "ஆய்" என்னும் செய்தென் எச்சத்தை ஏற்று, "ஆம்" என்பதனோடு முடிந்தது. அருத்தி - விருப்பம். அருத்தியுடையதனை "அருத்தி" என்றது உபசார வழக்கு. 'காமம் உற்றாய்' என்பது 'காமுற்றாய்' எனக் குறைந்து நின்றது. "ஆம்" என்பது, 'அவன் கொடுத்தானாம்; நான் வாங்கினேனாம்' என்றல்போல மேவாமைப் பொருளில் வந்தது. எனவே, ஈற்றடி, நகை யுள்ளுறுத்த கூற்றாம். அங்ஙனமாயினும் தனது நிலைமையை அதன்மேல் ஏற்றிக் கூறியதனால், ஆற்றாமை மிக்க தலைவிக்கு ஓர் ஆற்றுதல் பிறந்தது. இதுவும் காமம் மிக்க கழிபடர் கிளவி.

363. குறிப்புரை: 'இருங் கடலே, ... இருள்கூர் யாமக் காலத்தும் உன்கண் துஞ்சாது. (ஆகலின் நீயும்) யாம் உற்றது உற்றாய். (அதனால் நீயும்) காளத்தியான் கழற்கே காமுற்றாயாமன்றே' எனக் கூட்டி முடிக்க.

கழற்கு - கழலைப் பெறுதற்கு. இரு - பெரிய. யாமம் - இடையாமம். அது துயிலுக்குச் சிறந்த காலம் ஆதலின் உம்மை உயர்வு சிறப்பு. "யாமத்து" என்பதில் அத்து, வேண்டாவழிச் சாரியை. "காலத்தும்" என்பதன் பின் 'ஒவிக்கின்றாய் ஆதலின்' என்பது வருவிக்க. உற்றது - உற்ற துன்பம்.

364. குறிப்புரை: 'நெஞ்சே, யான் எப்பொழுதும்' என்று எடுத்துக்கொண்டு, 'படையாராகிய அவர் அறியார்கொல்' என முடிக்க. கொல், ஐயம் ஐயத்திற்குக் காரணம் எதிர்ப் படாமை. பொறி - புள்ளி.

365. குறிப்புரை: முற்பகுதியை; தம் நெஞ்சை நோக்கியும், பிற்பகுதியை உலகரை நோக்கியும் கூறியவாறாகக் கொள்க.