பக்கம் எண் :

275கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி

388.நடம்ஆடும் சங்கரன்தாள் நான்முகனும் காணான்;
படம்ஆடும் பாம்பணையான் காணான்; - விடம்மேவும்
காரேறு கண்டன் கயிலாயன் றன்உருவை
யாரே அறிவார் இசைந்து.

89

389.இசையும்தன் கோலத்தை யான்காண வேண்டி
வசையில்சீர்க் காளத்தி மன்னன் - அசைவின்றிக்
காட்டுமேல், காட்டிக் கலந்தென்னைத் தன்னோடும்
கூட்டுமேல், கூடலே கூடு.

90


திருவாலங் காட்டில் நிகழ்ந்தது' என்பது ஐதிகம். முதற்கண் இறைவன் மேல் வைத்து "ஊடுருவ" என்றார். போர்க்கும் - மறைக்கும். இறைவன் பாதாளம் ஊடுருவும்படி தான் அண்டம் கடந்து உருவித்திக்கனைத்தும் போர்க்கும்' - என இயைத்து முடிக்க.

388. குறிப்புரை: நான்முகன் (பிரமன்) 'முன்னே முடியைக் கண்டுவிட்டுப் பின்னே அடியைக் காண்பேன்' என முயன்று, முதல் முயற்சியிலே தோல்வி யுற்றமை பற்றி "தாள் நான் முகனும் காணான்" என்றார். தாளைப் பாம்பணையான் (மாயோன்) தேடிக் காணாது எய்த்தமை வெளிப்படை. காணாமைக் குறை இனிது புலப்பட வேண்டித் தனித்தனித் தொடராகக் கூறினார். தன், சாரியை. 'இசைந்து அறிவார்' என மாற்றுக. இசைதல் - தம் இச்சையாகத் தாமே காண நினைத்தல். "யாரோ அறிவார்" - என்னும் வினா, அறிவார் ஒருவரும் இன்மையைக் குறித்தது. 'அவனே காட்டினாலன்றித் தாமாக ஒருவரும் காண மாட்டார்' என்பது கருத்து.

காண்பார் ஆர்? கண்ணுதலாய்
காட்டாக் காலே.1

என்னும் அருட்டிரு மொழியைக் காண்க. இக்கருத்தினை வரும் வெண்பாவில் வெளிப்பட எடுத்துக் கூறுவார்.

389. குறிப்புரை: இசையும் -தானே தன் இச்சைப்படி ஏற்கின்ற. கோலம் - வடிவம். எனவே, தனக்கு உருவத்தைப் பிறர் படைத்துத் தர வேண்டாமை விளங்கிற்று. "வேண்டி" என்பதற்கு, 'தான் வேண்டி' என உரைக்க. வசை - குற்றம். அசைவு தளர்ச்சி அஃதாவது, அருள் பண்ணாமை, "கூடலே" என்பதை முதலிற் கொள்க. "காட்டி" என்றது அனுவாதம். கலத்தல் - எதிர்ப்படுதல். "காட்டுமேல், கூட்டுமேல்" என்பன, 'அவைகளை அவன் செய்தல் உண்டாகும் எனின்' என்னும் பொருள.


1. திருமுறை - 6.95.3.