பக்கம் எண் :

283திருஈங்கோய்மலைஎழுபது

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

10 திருஈங்கோய்மலைஎழுபது

திருச்சிற்றம்பலம்

400.அடியும், முடியும் அரியும் அயனும்
படியும், விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே, ஓங்காரம்
அன்னதென நின்றான் மலை.

1


400. திருஈங்கோய்மலை, காவிரியின் வடகரைத் தலங்கள் அறுபத்து மூன்றில் இறுதியானதாக அமைந்துள்ளது. அதனை முன்பே சிறப்பித்துப் பாடியவர் நக்கீரதேவ நாயனார் அவரைப் பற்றிய குறிப்புக்கள், 'கயிலை பாதி காளத்தி பாதி யந்தாதி'க் குறிப்பில் தரப்பட்டன.

'திருஈங்கோய்மலை எழுபது' - என்பதில், "எழுபது" என்பது எண்ணாகுபெயராய் அத்துணையான வெண்பாக்களைக் குறித்துப் பின் கருவி யாகுபெயராய் அவற்றாலாகிய பிரபந் தத்தைக் குறித்தலின் இருமடி யாகுபெயர். நூறு, ஐம்பது, முப்பது ஆகிய பாக்களாலன்றி அறுபது. எழுபது ஆகிய பாக்களாலும் முற்காலத்தில் பிரபந்தங்கள் யாக்கப்பட்டன. அவ்வழக்கம் இக்காலத்தில் மறைந்துவிட்டது. இதன்கண் வரும் எழுபது வெண்பாக்களும் திருஈங்கோய் மலையின் சிறப்பையே கூறி, அது சிவபெருமானது இடமாக விளங்கும் தலைமைப் பாட்டினைக் குறிக்கின்றன.

குறிப்புரை: 'ஈங்கோயே' என்பதனை இறுதிக்கண் கூட்டி யுரைக்க. இது இதனுள் வரும் அனைத்து வெண்பாக்கட்கும் பொருந்தும். நொடியில் - சொல்லுமிடத்து, இதனை முதலிற் கொள்க. படி - பூமி. விசும்பு - ஆகாயம். இன்னது - இன்ன தன்மையது. "இன்னதென" என்பதை 'அடி, முடி' என்பவற் றோடு தனித் தனிக் கூட்டுக. "மன் அது" என்பதில் அது, "பகுதிப்பொருள் விகுதி. மன் - முதல். அது தன்னியல்பில் அஃறிணையாதலின் 'அது' என்னும் விகுதி பெற்றப்பின் பண்பாகுபெயராய், "நின்றான்" என்பதனோடு இயைந்தது. அரியும், அயனும் அனற் பிழம்பாய் நின்ற சிவபெருமானது வடிவின் அடியையும், முடியையும் தேடிக் காணாது எய்த்த சிவமகா புராண வரலாறு சைவ நூல்களில் பெரும்பான்மையாக எங்கும் சொல்லப்படுவது. 'அத்தகைய பெருமான் இருக்கும் மலை திருஈங்கோய்மலை' என்பதாம்.