பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை284

401.அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்ந்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே, மேரு
மலைவளைக்கை வில்லி மலை.

2

402.அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே, நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.

3

403.அரிகரியைக் கண்டவிடத்(து) அச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே,
மையடுத்த கண்டன் மலை.

4


401. குறிப்புரை: 'வில்லி மலை ஈங்கோயே' என முடிக்க. அந்தம் - அழகு. மாக் குழவி - மான் கன்று. ஆயம் - தன் இனம். பிரிந்து - பிரிந்து நின்றமையால். கொந்து அவிழ் தேன் - கொத்தாகிய பூக்கள் மலர்ந்து ஊற்றிய தேன். சந்து - சந்தன மரம். 'இலையை உண்ணக் கொடுக்கும்' என்க. 'ஈங்கோய் மலையில் குறவரும் அருளுடையராய் உள்ளார்' என்பதாம். 'மேரு மலையாகிய, வளைவை யுடைய கைவில் என்க. கைவில் - கையிற் பிடிக்கும் வில்; இஃது இனம் இல் அடை வில்லி - வில்லை யுடையவன்.

402. குறிப்புரை: அம் - அழகு. மகளிர் -சிறுமியர். அம்மனைக்கு - அம்மானை ஆடுதற்கு. 'தம் அன்னையை' என்பது இடைக் குறைந்து. "தம் அனையை" என வந்தது. 'ஒருத்திக்கு மகளிர் பலர்' என்க. குறத்தி - தாய்க் குறத்தி. "கொம்பு" என்றது யானைக் கொம்பினை. இறுதலை - அறுக்கப்பட்ட முனை. கிளைக்கும் - நிலத்தை அகழ்கின்ற. அகழ்ந்தது பவளத்தைப் பெறுதற்பொருட்டு. அருவகளால் வீழ்த்தப்பட்ட பவளங்கள் நிலத்தில் புதைந்து கிடத்தல் பற்றி அகழ்வாளாயினாள். 'அத்துணை வளம் உடையது ஈங்கோய் மலை என்றபடி. மறுதலை நோய் - சிவானந்தத்தைப் பெற ஒட்டாது மறுதலைக் கின்ற வினைகள். அவை பிராரத்துவமும், ஆகாமியமுமாம். 'நம்நோய், மேல் வரும் நோய்' என்க. மேல் - இனி.

403. குறிப்புரை: அரி - சிங்கம். "கரி" இரண்டும் களிற்றி யானை. சலிப்பாய் - இயங்குதல் உடைத்தாய். எனவே, முன்பு இயங்காது கிடந்தமை பெற்றாம். அகரம், அதன் இயல்பினைக் குறித்த பண்டறி சுட்டு. யானையைக் கண்டவிடத்து அதன் மேற் பாய்தல் சிங்கத்திற்கு இயல்பு. களிற்றியானை தன் பிடிமேற் கொண்ட அன்பினால் சிங்கத்தின் வருகைக்கு அஞ்சாது, துதிக்கையை நீட்டிக் கோபத்தால்