பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை286

407.ஈன்ற குறமகளிர்க்(கு) ஏழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை - ஊன்றவைத்(து)
என்அன்னை உண்ணென்(று) எடுத்துரைக்கும் ஈங்கோயே,
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.

8

408.ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே, நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.

9

409.உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்பேய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் - கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே,
பூமயிலி தாதை பொருப்பு.

10


வெளிப்போதல். 'வெடிபடுத்த' எனப் பிறவினை யாக்குக. "நெடுநெடென" என்பது ஒலிக்குறிப்பு. கழை - மூங்கில். 'ஈண்டு கழை' என்பதும் பாடமாகலாம். ஏங்குதல் - ஒலித்தல். 'காளை' என்பது எதுகை நோக்கிக் குறுக்கலும், திரிதலும் பெற்று, "கழை" என வந்தது.

407. குறிப்புரை: ஈன்ற மகளிர் - மகவை ஈன்ற பெண்டிர். ஏழை எளியவர். நான்ற - முன்பே அதற்கென்று கொண்டு வந்து கோத்து வைத்த. கறிக்கு ஏறு - கறிக்குப் பொருத்தமான. அசலை - ஒருவகைக் கிழங்கு. ஊன்ற வைத்து - நிலையாக வைத்து. முதுகுறத்தி இளையாளை, 'என் அன்னையே' என்றது அன்பினால்.

408. குறிப்புரை: "மந்தி" என்பதை முதலில் வைத்து, 'தான் ஈன்ற குழவிக்கு' என்க.

'குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும்
நிரம்ப நாடின் அப்பெயர்க் குரிய'.1

என்பதனால், இங்கு, 'குழவி' என்பது குரங்கின் இளமைப் பெயராய் வந்தது. இரு வரை - பெரிய மலை. நறவம் - தேன்; அஃது அதன் அடையைக் குறித்தது. 'சுவை தோன்ற' என ஒரு சொல் வருவிக்க. வரல் ஆம் . வருதற்குரிய.

409. குறிப்புரை: அறு பதங்கள் - வண்டுகள்; இதனை முதலிற் கொண்டு, 'தாம் உண்டிருந்த' என்க. ஊடுதல், இங்கே, வெறுத்தல். நிரம்ப உண்டமையால் வெறுப்பு உண்டாயிற்று. 'பண்டு இருந்த பொழில்வாய் முரல' என்க. யாழ் முரல - யாழின் இசைபோல ஒலிக்க. இது வினையுவமத் தொகை. யாழ், ஆகுபெயர். கண்டு -


1. தொல் - பொருள் - மரபியல்.