431. | குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர் கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே, மைந்நீட்டுங் கண்டன் மலை. | | 32 |
432. | கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை யிளமந்தி சென்றிருந்து - வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே, இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு. | | 33 |
433. | கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண்(டு) - ஒல்லை இருங்கைக் களிறேறும் ஈங்கோயே, மேல்நோய் வருங்கைக் களைவான் மலை. | | 34 |
பொன் கொடுக்கும்" என்பன இயைபுருவகம் "கடறு" என்ப காடாயினும், இஃது ஆகுபெயராய், ஆங்குள்ள மலையைக் குறித்தது. 431. குறிப்புரை: நறவம் - தேன். நறவத்தோடு கூட்டி, 'ஆக்க', என்பதன் ஈற்று அகரம் தொகுக்கப்பட்டது. அன்றி, 'ஆக்கு அகங்கள்' என வினைத்தொகையாக்கலும் ஆம். அகம் - இல்லம். "அஞ்சு அகங்கள்" என்றதில் அஞ்சு, பன்மை குறித்தது. 'அஞ்சு வீடு நுழைந்தேன்' என்பது நாட்டு வழக்கு. 'நாடிச் சென்று' எனவும், 'கைந்நீட்டி வாங்கி' எனவும் ஒரேர் சொல் வருவிக்க. உவப்பவர் குறவர்கள். களித்துவக்க, ஒருபொருட் பன்மொழி. மை நீட்டு - கருமையைக் காட்டுகின்ற. 432. குறிப்புரை: கூழை - உடல் வளைந்த. முது மந்தி - கிழப் பெண் குரங்கு. இது தாய். 'கோல் கொண்டு தாக்க' என ஒருசொல் வருவிக்க. தாக்கப்பட்டது தேன் கூடு. ஏழை - அறிவில்லாத; திறமையற்ற. இளமந்தி, இது மகள். "இலையால் உண்ணும்" என்றதனால், இலையால் ஏற்றமை பெறப்பட்டது. இஞ்சி - மதில்; முப்புரம். சிலை - வில். தான், அசை. 433. குறிப்புரை: கொத்து, பூங்கொத்து, இறுத்துக்கொண்டு, 'ஒடித்துக்கொண்டு' என ஒருசொல் இனி, 'குண்டு சுனை' எனப்பாடம் ஓதலும் ஆம். குண்டு - ஆழம். வேங்கைப் பூ தாம் ஆடும் நீரில் நறுமணத்திற்காக இடுவது. 'சுனை நீர்' என இயையும். மல், 'மல்லை' என ஐகாரம் பெற்றது. 'வளப்பம்' என்பது பொருள். நாட்டிக் கொண்டு - மனத்தில் உறுதி செய்து கொண்டு ஏறுதல். சுனை உள்ள இடத்தை நோக்கி ஏறுதல். 'மேல் கை வரும் நோய்' என மாற்றுக. மேல் - வருங் காலம். கை வருதல் - நெருங்கி வருதல்.
|