434. | கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் - செவ்வை எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே, அன்பர் குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று. | | 35 |
435. | கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம் தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே, தாழ்சடைமேல் வண்டூன்றுந் தாரான் மலை. | | 36 |
436. | கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே, தீங்கு வரவதனைக் காப்பான் மலை. | | 37 |
434. குறிப்புரை: 'கூந்தலில் சேர்க்கின்ற கடி' என்க. கடி - வாசனை. கவ்வை - அலர் தூற்றுதல். அஃது இங்குச் சேய்மை யினும் சென்று கமழ்ந்து கூந்தலின் இருப்பை அறிவித்தலைக் குறித்தது. "ஆர்வலர் - புன்கணீர் பூசல் தரும்" என்றார் திருவள்ளுவ நாயனாரும். கடி பிடித்தல் - வாசனை யேற்றுதல். "காதன்மை" என்பதில், மை பகுதிப்பொருள் விகுதி. இதில் னகர ஒற்று நீக்கி அலகிடுக. செவ்வை எறித்த மலர் - நன்றாகப் பூத்துப் பொலிகின்ற மலர்கள். பொதுப்படக் கூறியதனால், ஏற்கும் மலர்களை யெல்லாம் கொள்க. "கொண்டுவிடும்" என்பதில், விடு, துணிவுப் பொருண்மை விகுதி. 435. குறிப்புரை: கொல்லை - தினை, சோளம் முதலியவைகளை விளைவிக்கும் புன்செய் நிலம். அவற்றுள் யானை புகாமல் தடுக்கக் குறவர்கள் அப்பால் உள்ள இடங்களில் படுகுழிகள் தோண்டி, கழிகளாலும், இலைகளாலும் அக்குழிகள் தெரியாதபடி மூடிவைப்பர். அதனை யுணர்ந்து யானைகள் மரக் கிளைகளை முரித்துத் தண்டாக முன்னே ஊன்றிப் பார்த்துச் செல்லும். நாகம் - யானை. "வண்டு ஊன்றும்" என்பதில் ஊன்றுதல், கிளறுதல். 436. குறிப்புரை: அழித்த - தோற்கச் செய்த. "வேங்கை" இரண்டில் முன்னது வேங்கை மரம்; பின்னது புலி, இது சொற்பின் வருநிலையணி. மணி - அழகு. 'புலி வர, அதனைக் கண்டு இரியும்' என்க, இரிதல் - அஞ்சி நீங்குதல். ஈற்றடியில் "வரவதனை" என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. வரவைக் காத்தலாவது, வாராமற் காத்தல்.
|