பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை298

440.தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே, செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.

41

441.செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடியட்ட மாக்களிறு போந்து - கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே, ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் பொருப்பு.

42


அவர்களே முயன்று இனிய உணவைப் பெற்று உண்ணுதலைக் கண்டு ஆடவர் மகிழ்வாராயினர் என்க. இன்பம் - இருவர் தேவியருடன் இன்புற்றிருப்பான். குமரன் - முருகன், 'அவன் மிக இளையனாயினும் அவனைப் பெற்ற தந்தை மிக முதியன்' என்னும் நயம் தோன்றுதற்கு. "முதுதாதையார்" என்றார் சிவபெருமானை. நன்றாய்ந்த நீணிமிர்சடை - முதுமுதல்வன்"1 எனச் சங்கத்துச் சான்றோரும் கூறினார். "குமரன் முது" என்னும் சீரினை னகர ஒற்று நீக்கி அலகிடுக.

440. குறிப்புரை: 'தண் சாரல் ஒண்கானத்தில் தாய் ஓங்கி அடரும் வேய் ஓங்கிக் கண் கன்றி, முத்தம் எதிர் பிதுங்கித் தீ ஓங்கித் தீ விளைக்கும் ஈங்கோய்' என இயைத்துக் கொள்க. வேய் - மூங்கில். தாய் - பல பக்கங்களிலும் தாவி. தாம், அசை. "தாய் ஓங்கி அடரும் வேய்" எனக் கூறியது முன்னர் அதன் வளர்ச்சியையும், பின்னரும் "ஓங்கி" என்பது முதலாகக் கூறியன அதன் விளைவுகளையும் விளக்கியவாறு. கண் - கணுக்கள். கன்றுதல், உறுதிப்படுதல். கன்றி - கன்றுதலால். பிதுங்கி - பிதுங்கப் பெற்று. முன்னர், "தீ ஓங்கி" என்றது, "கன்றி, பிதுங்கி" என்றவற்றோடு ஒருங்கு நிகழ்ந்ததையும், பின்னும் 'தீவிளைக்கும்" என்றது, வேய்கள் சாரலில் விளைக்கும் விளைவையும் குறித்தன.

441. குறிப்புரை: 'சிங்கத்தின் சீற்றத்தீக்கு அஞ்சிப் பிடி செடி முட்ட, மாக் களிறு அட்டம் போந்து கடம் முட்டி, என்னே சீ என்னும் ஈங்கோய்' எனக் கூட்டுக. முட்ட - சேர; சேர்ந்து மறைய முயல், அட்டம் போந்து - குறுக்காகப் புகுந்து. அஃதாவது பிடியைக் காக்கும் முறையில் புகுந்து. கடம் -காட்டில்; அஃதாவது சிங்கம் வாழும் இடத்தில். முட்டி - சேர்ந்து. அங்குச் சிங்கம் காணப்படாமையால் அதனைக் களிறு 'என்னே! சீ!' என்று இகழ்ந்தது. ஏந்து அழல் -எரிகின்ற நெருப்பு. நேர் "அனையான்" என்பது ஒருபொருட் பன்மொழி.


1. புறம் - 166.