பக்கம் எண் :

299திருஈங்கோய்மலைஎழுபது

442.சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே, மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.

43

443.செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே,
மாக்கலைகள் வைத்தான் மலை.

44

444.தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே,
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.

45

445.தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் - தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே, எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.

46


442. குறிப்புரை: தாது - மகரந்தம். சோதிப் புனை - ஒளியாகிய அழகு. "மனை" என்றது முதற்கண் கூறிய தாமரை மலரே.

443. குறிப்புரை: பிண்டி - மா, பச்சை - காய்ச்சப்படாதது. மணி - அழகு. சிறப்பு - உபசாரம். மாக்கலைகள் - உயர்ந்த நூல்கள். வைத்தான் - உலகர் பொருட்டு ஆக்கி வைத்தவன். முதல் அடி முரண்தொடையும், விரோத அணியும் பெற்றது.

444. குறிப்புரை: தடம் - சுனை. குடைந்த - முழுகிய. "கொங்கை மகளிர்" என்றது மங்கைப் பருவத்தினர் ஆதல் குறித்தபடி. நறவம் - தேன். உடன் - பலர் திரண்டு. "கோக் குரவை" என்பதில், குரவை, 'கூத்து' எனப் பொதுப் பொருள் தந்தது. கோக் குரவை - தலையாய கூத்து. பின் வந்த "ஆடி" என்பது பெயர்.

445. குறிப்புரை: தாமரையின் தாள் தகைத்த தாமர் - தாமரை மலரின் தாள்களை இணைத்துக் கட்டிய மாலையை அணிந்தவர்கள்; அந்தணர்கள். ஐ - அழகு. இஃது ஆகுபெயராய், அழகை யுடைய இளஞ் சிறார்களைக் குறித்தது. தாமர்தம் ஐகள், அந்தணச்சிறார்கள். தாள் தகைய - தங்கள் கால்கள் வலிக்கும்படி. அரையில் பாய்ந்து - 'அரை' என்னும் ஒருவகை மரத்தின்மேற் பாய்ந்து. உகளும் புறவு - விளையாடு கின்ற காடு. தா மரையின் ஈட்டம் - தாவி ஓடுகின்ற 'மரை' என்னும் மானின் கூட்டத்தை. சிதறும் - அழிக்கின்ற,