பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை300

446.தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப் பாழி மடலேறி - வெள்ளகட்ட
காராமை கண்படுக்கும் ஈங்கோயே, வெங்கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு.

47

447தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே, பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.

48

448.தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே, வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.

49


வாட்டம் - மெலிவு. ஈங்கோய் மலையைச் சூழ அந்தணர்கள் இருக்கை யுள்ளதைக் குறித்தவாறு. இவ்வெண்பா, சொற்பின்வரு நிலை யணி பெற்றது.

446. குறிப்புரை: அகடு - நடுவிடம். தெள் அகட்ட சுனை - தெளிவான நடுவிடத்தையுடைய சுனை. தேன் + மலர் = தேமலர். 'வாயாகிய வட்டம்' என்க. வள்ள வட்டம் - கிண்ணம் போலும் வட்டம். பாழி - உள் ஆழ்ந்த. மடல் - இதழ் வெள் அகட்ட காராமை - வெண்மையான வயிற்றை யுடைய கரிய ஆமை.

குறிப்பு : பழம் பதிப்புக்களில் காணப் படாதனவாகிய இப்பதினைந்து பாடல்களும் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்துப் பதிப்பில் கண்டு, பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

447. குறிப்புரை: 'பாங்கு அமரர் சீராட்ட நின்றான் சிலம்பு, குரங்கு பலவின் சுளைகளை மக்கள் கையில் கொடுத்து ஊட்டும் ஈங்கோயே' எனக் கூட்டுக. தேன் - இனிமை, பலா - பலாமரம். கருங்குரங்கு என்பது இங்கு பைங்குரங்கு எனப்பட்டது. வான் குணங்கள் - மக்களுடைய சிறப்புப் பண்புகள். சீராட்டுதல் என்பது ஒரு சொல். புகழ்ந்து என்பது அதன் பொருள். பாங்கு - பக்கம் சந்நிதி என்பது பொருள்.

448. குறிப்புரை: சுனைகள் புக்கு என்பதன் பின் 'ஆடும் மகளிர்' என ஒரு சொல் வருவிக்க. சுனை ஆடும் மகளிர் காட்டின் அழகை கண் குளிரக் காணும்படி அருவிகள் வந்து இழியும் ஈங்கோய் என்க. சந்து - சந்தன மரம். கான் - காடு, சந்தனக் காட்டின் பேரழகு என்க.