461. | மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள் வருவனகள் கண்டு - சிலையை இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே, மாதைப் புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு. | | 62 | 462. | மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர் முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே, தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று. | | 63 | 463. | மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி இருந்து முறைமுறையே - நந்தி அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே, கூற்றம் வளைந்தோடச் செற்றான் மலை. | | 64 | 464. | மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண் முந்திப் பறித்த முறியதனுள் - சிந்திப்போய்த் தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே, செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை. | | 65 |
461. குறிப்புரை: மலையர் - மலையிலே உள்ள வேடர். கலைகள் - மான்கள். சிலை - வில். கோல் - அம்பு. 462. குறிப்புரை: 'மதக் கரி' என்பது, "மத்தக் கரி" என விரித்தல் பெற்றது. கரி - யானை. வாள் அரிகள் - கொடிய சிங்கங்கள். முத்தம் - முத்து. இவை யானையின் மத்தகத்தி லிருந்து உதிர்ந்தவை. பனி - பனித்துளிகள், மொய்ம்பு - வலிமை. அஃது இங்கு 'சிறப்பு' எனப் பொருள் தந்தது. 'மொய்ம்பிற்றாம் ஏனற் புனம்' என ஒரு தொடராக ஓதற்பாலதனை "மொய்ம்பிற்று; அத்தகைய ஏனற் புனம்" என இருதொடராக ஓதினார், அச்சிறப்பை வலியுறுத்தற்கு ஆல், அசை. ஏனல் - தினை. 'புனலையும், பிறையையும் அணிந்தான்' என்க. 463. குறிப்புரை: மணி வரை - இரத்தின மலை, இஃது இம்மலையின் ஒரு பகுதியில் உள்ளதாகக் கூறப்பட்டது. 'முறை முறையே முந்தி' - என மாற்றிக்கொள்க. முறைமுறையே முந்து தலாவது, 'நான் முன்னே, நான் முன்னே' என ஒன்றை ஒன்று முந்துதல். நந்தி - மகிழ்ந்து. அணைதல் - ஒன்றை ஒன்று தழுவுதல். ஆலிக்கும் - ஆரவாரிக்கும் வளைந்து ஓடுதல் - மறைந்து ஒடுதல். 464. குறிப்புரை: மக இனங்கள் - குட்டிக் கூட்டங்கள். பறித்த - பிளந்து எடுத்த. முறி - சிறு துண்டுகள். "உள்" என்னும் ஏழன் உருபை, 'இன்' என்னும் ஐந்தன் உருபாகத் திரிக்க. போய் - பல
|