வெண்பா 474. | போதெலாம் பூங்கொன்றை கொண்டிருந்த பூங்கொன்றைத் தாதெலாம் தன்மேனி தைவருமால் - தீதில் மறைக்கண்டன், வானோன், வலஞ்சுழியான் சென்னிப் பிறைக்கண்டங் கண்டணைந்த பெண். | | 5 |
கட்டளைக் கலித்துறை 475. | பெண்கொண் டிருந்து வருந்துங்கொ லாம்;பெருமான்திருமால் வண்கொண்ட சோலை வலஞ்சுழி யான்,மதி சூடிநெற்றிக் கண்கொண்ட கோபங் கலந்தன போல்மின்னிக்கார்ப்புனத்துப் பண்கொண்டு வண்டினம் பாடநின் றார்த்தன பன்முகிலே. | | 6 |
474. குறிப்புரை: “பூங் கொன்றை” இரண்டில் முன்னது அழகிய கொன்றை மரம்; பின்னது ‘கொன்றைப் பூ’ எனக் பின்முன்னாக மாற்றிக் கொளற்பாலது. போது - பொழுது. போதெலாம் - ‘எப்பொழுதும். தைவரும்’ என முடிக்க. “பெண்” என்றது, ‘என் பெண்’ என்றபடி. ‘என் பெண் பிறைக் கண்டம் கண்டு அணைந்த பின், கொன்றை மரம் கொண்டிருக்கின்ற கொன்றப் பூவைப் பறித்து அதன் மகரந்தத்தை உடம்பு முழுதிலும் எப்பொழுதும் பூசிக்கொண்டே யிருக்கின்றாள் என்க. தைவருதல் - தடவுதல் மறைக் கண்டன் - வேதம் முழங்கும் மிடற்றினை உடையவன். வானோன் - தேவன். கண்டம்- துண்டம். அணைதல் - மீளுதல். இது, தலைவியது ஆற்றாமைக்குச் செவிலி நொந்து கூறியது. 475. குறிப்புரை: ‘புனத்து வண்டினம் பாடப் பன்முகில் மின்னி ஆர்த்தன; பெண் கொண்டிருந்து வருந்தும்’ என இயைத்து, ‘என் செய்கேன்’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. பெண் தலைமை பற்றித் தலைவியையே குறித்தது. ‘திருமாலின் வண்ணம் கொண்ட சோலை என்க. திருமாலின் வண்ணம் கருமை. கொண்டு - இவற்றை நினைத்துக்கொண்டு. கொல், ஆம் அசைகள். “கோபம்” என்பது, கோபத்தால் தோன்றும் தீயைக் குறித்தமையால் கருவியாகுபெயர் கார்ப் புனம் - இருளால் கருமை யுடைத்தாகிய புனம், “வண்டுகள் பாட” என்றது. ‘கார்ப் பருவத்தில் பூக்கள் பூத்தன’ என்பதைக் குறித்தவாறு. இது, தலைவன் நீடக் கார்ப்பருவம் கண்டு, ‘தலைவி ஆற்றாள்’ எனத் தோழி நொந்து தன்னுள்ளே சொல்லியது.
|