வெண்பா 483. | தனமேறிப் பீர்பொங்கித் தன்அங்கம் வேறாய் மனம்வேறு பட்டொழிந்தாள் மாதோ, - இனமேறிப் பாடாலம் வண்டலம்பும் பாய்நீர் வலஞ்சுழியான் கோடாலம் கண்டணைந்த கொம்பு. | | 14 |
கட்டளைக்கலித்துறை 484. | கொம்பார் குளிர்மறைக் காடனை, வானவர் கூடிநின்று ‘நம்பர் ‘எனவணங் கப்பெறு வானை, நகர்எரிய அம்பாய்ந் தவனை, வலஞ்சுழி யானையண் ணாமலைமேல் வம்பார் நறுங்கொன்றைத் தாருடை ‘யானை வணங்குதுமே. | | 15 |
திருச்சிற்றம்பலம் 483. குறிப்புரை: ‘வண்டு இனம் ஏறிப் பாடலம் அலம்பும்’ எனத் தொடங்கியுரைக்க. ‘பாடலம்’ என்பது நீட்டல் பெற்றது. பாடலம் - பாதிரி. சிவபெருமானுக்கு உரிய சில சிறந்த மலர் களுள் பாதிரியும் ஒன்றாகலால் அதனை விதந்து கூறினார், கோடாலம் - கொம்பு - பூங்கொம்புபோல்வாராய பெண்; என்றது தலைவியை இஃது உவம ஆகுபெயர் ‘பீர் தனம் ஏறிப் பொங்கி’ என மாற்றிக் கொள்க. பீர் - பசலை. தனம் - கொங்கை. பொங்கி - பொங்கப்பட்டு. அங்கம் - உடம்பு. “வேறாய்” என உடைமையின் தொழில் உடையாள் மேல் ஏற்றப்பட்டது. மனம் - மனத்தில் தோன்றும் எண்ணம் எண்ணம் வேறுபடுதலாவது, அன்னை, அத்தன் முதலாயினா ரை நீப்ப நினைத்தல். ஒழி துணிவுப் பொருண்மை விகுதி. மாது, ஓ அசைகள். இது தலைவியது வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 484. குறிப்புரை: கொம்பு ஆர் குளிர் மறைக்காடு - பூங்கொம்புகளில் நிறைந்த குளிர்ச்சியை யுடைய திருமறைக் காடு. நம்பன் - பழையோன்; ‘விரும்பப்படுபவன்’ என்றும் ஆம். அம்பு ஆய்ந்தவன் - அம்பை ஆராய்ந்து எடுத்து எய்தவன். வம்பு - புதுமை. நறு - மணம். “கொன்றைத் தார் உடையான்” என்பது, ‘சிவன்’ என்னும் ஒரு பெயராய், “அண்ணாமலை மேல்” என்பதற்கு முடிபாயிற்று. இதனுள், “மேல்” என்றது மேலிடத்துள்ள கோயிலை. “அண்ணா மலைமேல் அணிமலையை”1 எனச் சேக்கிழாரும் கூறினார். அக்கோயில் இன்று நமக்குத் தரை மட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை முற்றிற்று
1. பெரிய புராணம் - அப்பர் - 313.
|