பக்கம் எண் :

317திருஎழுகூற்றிருக்கை

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

12. திருஎழுகூற்றிருக்கை

அகவற்பா
திருச்சிற்றம்பலம்

485.ஓருடம்(பு) ஈருரு வாயினை, ஒன்றுபுரிந்(து)
ஒன்றின் ஈரிதழ்க் கொன்றை சூடினை;
மூவிலைச் சூலம் ஏந்தினை;
சுடருஞ் சென்னி மீமிசை
5இருகோட் டொருமதி எழில்பெற மிலைச்சினை;

மும்மணிக் கோவை முப்பது பாடல்களை உடையதாய் வருதல் மரபாயினும், இது பதினைந்து பாடலோடே முற்றுப் பெற்றது. அஃது ஆசிரியர் கோட்பாடு.

485. எழுகூற் றிருக்கை - ஏழு கூறுகளது இருக்கையாகிய பாட்டு. இருக்கை - இருப்பிடம். ஏழு கூறுகள், ஒன்று முதல் ஏழு முடிய உள்ள எண்கள் ஒரு முறை கூடியும், குறைந்தும் வர, எண்ணலங்காரம் அமையப் பாடுவதால் அமையும். அம்முறையாவது; 1) 1, 2, 1. (2) 1, 2, 3, 2, 1 (3) 1, 2, 3, 4, 3, 2, 1, (4) 1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1, (5) 1, 2, 3, 4, 5, 6, 5, 4, 3, 2, 1, (6) 1, 2, 3, 4, 5, 6, 7, 6, 5, 4, 3, 2, 1. ஏழு கூறு வருதல் வேண்டும் என்பதற்காக ஆளுவதாகச் சொல்லப்பட்ட அந்த முறையையே மீட்டும் ஒருமுறை சொல்லிப் பாட்டை முடிப்பார்கள். இப்பாட்டு அகவற்பாவாகவே வரும், இது ‘மிறைக் கவி’ எனப்படும் சித்திர கவிகளில் ஒன்றாகும். அதற்கு ஏற்ப இதனைத் தேர்போல வரையப்பட்ட ஓவியத்திற்குள் எண்ணுப் பெயர்கள் முறையாக அமைய அடைத்துக் காட்டுவர். அதனால் இது ‘இரத பந்தம்’ என்றும் சொல்லப்படும். சித்திர கவியை ‘அருளாளரல்லது பிறர் பாடலாகாது’ எனத் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் ஆத்திரையன் பேராசிரியனார் கூறுவர். திருஞானசம்பந்தர் அருளிச் செய்த சித்திரக் கவிப்பாடல்களுள் திரு எழுகூற்றிருக்கையும் ஒன்று.1 என்பது அறியத் தக்கது. இதனுள் சில சொற்கள் பொருளால் எண்ணுப் பெயராய் இல்லாவிடினும் சொல்லால் எண்ணுப் பெயராய் எண்ணலங்காரத்தை நிரப்பும், எண்ணலங்காரமும் முரண் தொடையுள் அடங்கும்.


1. திருமுறை - 1.128.