46. | அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தன்றிப் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்(கு) ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். | | 3 |
47. | ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத(து) என்கொலோ! கேள்ஆமை - நீள் ஆகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை. | | 4 |
48. | இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான்; தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான்; - இறைவனே ‘எந்தாய் எனஇரங்கும்; எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான். | | 5 |
வருவிக்க. ‘அன்பை அறுத்துவிடாது’ என்றேனும், ‘அன்பு அறப்பெறாது’ என்றேனும் உரைக்க. 46. முதற்கண், “அல்லால்” என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், “அல்லால்” என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, “அன்பு” என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. ‘பவர் போலும் சடை’ என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி, போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. ‘அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்’ என இயைத்துக்கொள்க. ‘ஆகாது’ என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின. 47. அ. சொ. பொ.: ‘கேள் ஆமை யாக’ என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. “ஆகம் செம்மையான்” என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், ‘மற்றொன்று’ என்றமையால், ‘கருமை’ என்றதாயிற்று. ‘ஆம் இறை, ஆட்கொண்ட இறை’ எனத் தனித்தனி இயைக்க. “கேளாதது என்கொலோ” என்றது, ‘இன்னும் முறையிடல் வேண்டும் போலும்’ என்பதாம். 48. அ. சொ. பொ.: இறக்கம் - நீக்குதல்; அழித்தல். “இறைவன்” என்றது, ‘சிவன்’ என்றபடி. “இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்”1 என்னும் நிகண்டினால், ‘இறைவன்’
1. சூடாமணி நிகண்டு - தொகுதி - 11.11
|