49. | வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான். | | 6 |
50. | யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்; - யானேஅக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன். | | 7 |
என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். ‘உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்ப வனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே’ என்பது உணர்த்தியவாறு 49. அ. சொ. பொ.: வானம் - சிவலோகம். “உம்பர்கோன்” என்றது சீகண்ட உருத்திரரை - அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட -இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. “என்பாரும், என்பாரும் என்க. யான் ‘ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்’ என்பன்” என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர் தலாம்’ என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த “என்க” என்பதன்பின் ‘அவன்’ எனச் சுட்டி யுரைக்க. 50. அ. சொ. பொ.: இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, “யானே”என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், ‘ஆதலின்’ என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றை யணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், ‘பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்’ என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு, ‘என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை. வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே"1 எனவும், “எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன் ... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே”, “என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள் .... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே”2 எனவும் போந்தவற்றையும் உணர்க.
1. திருமுறை - 2.106 2. திருமுறை - 5. 7.2., 78.2
|