51. | ஆயினேன் ஆள்வானுக்(கு) அன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள். | | 8 |
52 | அருளே, உலகெலாம் ஆள்விப்ப(து) ஈசன் அருளே, பிறப்பறுப்ப தானால், - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன்; எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவ தெனக்கு. | | 9 |
51. அ. சொ. பொ.: ‘ஆள்வானுக்கு (ஆள்) ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு’ என இயைத்து முடிக்க. ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் “ஆள்வான்” என்றதனால், “ஆயினேன்” என்றது, ‘ஆள் ஆயினேன்’ என்றதாயிற்று. ‘பெறற்கு அரியன்” என்றது, ‘சிவன்’ என்றபடி. ‘சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனாயினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு’ என்றபடி. “திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்”1 என்றது காண்க. “தூய ... போல்வான்” என்றது ‘சிவன்’ என்றபடி. ‘புனலாகிய கங்கை’ என்க. “அனற்கு அங்கை” என்பதை, ‘அங்கைக்கு அனல்’ எனப் பின்முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க. 52. அ. சொ. பொ.: ‘ஈசன் அருளே உலகெலாம் ஆள் விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே’ என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். “ஆனால்” என்பது தெளிவின்கண் வந்தது, “காண்பவன் சிவனே யானால்”2 என்பதிற் போல. ‘மெய்ப் பொருளையும்’ என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல். அறிவிப்பதொரு துணையின்றித் தானே அறியமாட்டாத இயல்பை யுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவிகளைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள்களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது
1. திருமுறை - 1.126.7. 2.சிவஞான சித்தி சுபக்கம் - சூ. 2.27
|