பக்கம் எண் :

35அற்புதத் திருவந்தாதி

பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும். இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”1 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார், “அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்” என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்கு வார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.

இதனையே,

இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார்.2

என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.

அருளால் எவையும் பார்என்றான்;-அத்தை

அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;

இருளான பொருள்கண்ட தல்லால்,- கண்ட

என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி3

எனத் தாயுமான அடிகளும் கூறினார். ‘மெய்ப்பொருளாவது யாது’ என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழி யாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்குவார்க்கு உண்மை புலனாகாது என்பதை,

சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு

எனத் திருக்களிற்றுப்படியார்4 வலியுறுத்தி ஓதிற்று.


1. திருவாசகம் - சிவபுராணம் - 18

2. பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் - 71

3. தாயுமானவர் பாடல் - ஆனந்தக் களிப்பு

4. வெண்பா - 6