| ஈரமில் நெஞ்சத் திராவணன் தன்னை வீரம் அழித்து விறல்வாள் கொடுத்தனை; திக்கமர் தேவருடன் திருந்தாச் செய்கைத் தக்கன் வேள்வியைத் தளரச் சாடினை; | 50 | வேதமும் நீயே; வேள்வியும் நீயே; நீதியும் நீயே; நிமலன் நீயே; புண்ணியம் நீயே; புனிதன் நீயே; பண்ணியன் நீயே; பழம்பொருள் நீயே; ஊழியும் நீயே; உலகமும் நீயே; | 55 | வாழியும் நீயே; வரதனும் நீயே; தேவரும் நீயே; தீர்த்தமும் நீயே; மூவரும் நீயே; முன்னெறி நீயே; மால்வரை நீயே; மறிகடல் நீயே; இன்பமும் நீயே; துன்பமும் நீயே; | 60 | தாயும் நீயே; தந்தையும் நீயே; விண்முதற்பூதம் ஐந்தவை நீயே; புத்தியும் நீயே; முத்தியும் நீயே; சொலற்கருந் தன்மைத் தொல்லோய் நீயே; கூடல் ஆலவாய்க் குழகன் ஆவ(து) | 65 | அறியா(து) அருந்தமிழ் பழித்தனன் அடியேன் ஈண்டிய சிறப்பின் இணையடிக் கீழ்நின்று வேண்டும் அதுஇனி வேண்டுவன் விரைந்தே. |
அமர் தேவர் - திக்குப் பாலகர். (அடி - 53) பண்ணியன் - எல்லாவற்றையும் ஆக்கியவன் (அடி - 55) வாழி - கால எல்லையின்றி வாழ்பவன். (அடி - 57) முன் நெறி - எல்லா நெறி கட்கும் முன்னதாய நெறி. (அடி - 62) புத்தி - போகம். முத்தி - மோட்சம் (அடி - 64) குழகன் - அழகன் (அடி - 64) ஆவது - பின் விளைவது (அடி - 64, 65) ‘ஆவது அறியாது குழகனாகிய நினது அருந்தமிழைப் பழித்தனன்’ என மொழி மாற்றி யுரைக்க (அடி - 66) ஈண்டிய சிறப்பின் இணையடி - இங்குச் சொல்லப் பட்டவற்றுடன் மற்றும் பலவாகத் திரண்ட சிறப்புக்களை யுடைய இணையடி. (அடி - 66, 67) இனி - இப்பொழுது. இதனை மேல் (அடி - 65) “அடியேன்” என்றதற்கு முன்னே கூட்டுக. (அடி - 67) வேண்டும் அது - எனக்கு வேண்டுவனவற்றை வேண்டிப் பெறுதலாகிய அதனையே. விரைந்து வேண்டுவன் - சற்றும் தாழாது விரும்புகின்றேன் ‘தாழாது விரும்புகின்றேன்’ என்றது. ‘முன்பு இருந்த நிலையினின்றும் நான் மாறிவிட்டேன்’ என்பதைக் குறித்தபடி.
|