வெண்பா | விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா(து) இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் - விரைந்தென்மேல் சீற்றத்தைத் தீர்த்தருளும் தேவாதி தேவனே ஆற்றவும் செய்யும் அருள். |
திருச்சிற்றம்பலம்
வெண்பா : ‘அடியேன், எம்பெருமான் வேண்டியது வேண்டாது விரைந்தேன் இகழ்ந்தேன்; பிழைத்தேன்; தேவாதி தேவனே, (இனி நீ) என்மேல் ஆற்றவும் செய்யும் அருள், என்மேல் (நீ கொண்ட) சீற்றத்தைத் தீர்த்தருளும்’ என இயைத்து முடிக்க. நீ வேண்டியது - நீ விரும்பியதை (நான் விரும்புவதே கடப்பாடாய் இருக்க அவ்வாறு செய்யாது அதனை நான்) விரும்பாது இகழ்ந்தேன். (எனது அறியாமையால் எண்ணிப் பாராமல்) பதறிவிட்டேன். என்க. “தீர்த்தருளும்” என்றது, ‘தீர்த்தருளுவதாக’ என்றபடி. இத்திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர, நக்கீரர் அருளிச் செய்தனவாய் உள்ள பிரபந்தங்கள் பலவும் ஆலவாய்ப் பெருமானது அருந்தமிழை இகழ்ந்த குற்றத்தைப் பொறுத்தருள வேண்டிப் பாடப்பட்டனவாகச் சொல்லப்பட்ட போதிலும் இந்த ஒரு பாட்டில்தான் அதற்கு அகச் சான்று காணப்படுகின்றது. பெருந்தேவபாணி முற்றிற்று.
|