பக்கம் எண் :

335கார் எட்டு

நக்கீரதேவ நாயனார்
அருளிச் செய்த

15. கார் எட்டு

திருச்சிற்றம்பலம்

வெண்பா

488.அரவம்அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவிஎழுந்தெங்கும் மின்னி, - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார். 1

488. கார் - மேகம். மேகத்தின்மேற் செல்லும் எட்டுப் பாடல்களை யுடையமையால் இது, ‘காரெட்டு’ என்னும் பெயரினதாயிற்று. இதனைக் ‘கார் நாற்பது’ போன்றது எனலாம். எட்டுப் பாடல்களிலும் மேகம் உவமிக்கப்படும் பொருளாகவும், இறைவனது திருமேனி உறுப்புக்கள் உவமமாகவும் சொல்லப்படும். அங்ஙனம் சொல்லுதலை ‘எதிர்நிலை உவமம்’, அல்லது ‘விபரீதோபமாலங்காரம்’ என்பர். புகழப்படும் பொருளை இவ்வாறு புகழ்தல் ஒருமுறை. புகழப்படும் பொருளை உவமிக்கப்படும் பொருளாக வைத்துக் கூறுதலே முறைமையாகலின் இங்ஙனம் மாறிக் கூறுதல் ‘எதிர்நிலை’ என்றும், ‘விபரீதம்’ என்றும் சொல்லப்படுகின்றது. “முன்னிக் கடலைச் சுருக்கி”1 என்னும் திருவாசகத் திருப்பாடல் முதலியவற்றிலும் இவ்வாறு கூறப்படுதல் காணலாம். தொல்காப்பியத்துள் இதனை,

பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
மருளறு சிறப்பினஃ துவம மாகும்2

என்னும் நூற்பாவின் பொருளாக உரைத்தார் பேராசியர்.

குறிப்புரை: எல்லா வெண்பாக்களிலும் “கார்” என்பதை முதலிற் கொண்டு உரைக்க.

‘எங்கும் விரவி எழுந்து சடைபோல் மின்னி அடை வுற்றே சங்கம்போல் முழங்கும்’ என இயைத்து முடிக்க. ‘அரவினங்கள் அணைய’ என இயையும்.


1. திருவெம்பாவை - 16.
2. பொருள் - உவமவியல்.