6. | பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் - காண |
7. | வரத்திற் பெரிய வலிதொலைய்க் காலன் உரத்தில் உதைத்தவுதை போற்றி! - கரத்தான்மே |
8. | வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் - பொற்புடைய |
9. | வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி! - தூமப் |
10. | படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் - சடலம் |
அன்னத்தை, “கழுகு” என்றார். அன்றிப் புராண பேதம் பற்றிக் கூறினார் எனினும் ஆம். அண்டர் அண்டம் தேவர் உலகம். ஊடுருவியது கழுகுருவம். “பண்டொருநாள்” என்பதை முதலிற் கூட்டுக. “காணான்” என்பது, ‘காணானாய்’ என முற்றெச்சம். இழிய - (முன் இருந்த இடத்திற்கு) இறங்கிவிட, சிவனுக்கு முடி சடையேயாயினும் கனக (பொன்) முடி விலக்கன்று. “முடி கவித்து” என்றதனால். ‘காணப்படாது நின்றது முடி’ என்பது போந்தது. கோணாது - வளையாமல் ‘நிமிர்ந்து’ என்றபடி. கண்ணி - 5,6,7: பேணி - பாதுகாத்து ‘காலங்கள் தோறும்’ என. ‘தோறும்’ என்பது வருவிக்க. மாணி . பிரமசாரி. மார்க்கண்டேயர். கடவூர் - திருக்கடவூர். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று. ஊரில் உள்ளவர்களை “ஊர்” என்றார். ‘வரத்தின் பெற்ற பெரிய வலி’ என்க. உரம் - மார்பு. கண்ணி - 7.8.9: “கரத்தான் மே” என்பதனை, “குங்குமத்தின்” என்பதற்கு முன்னே கூட்டுக. கற்பு - கற்றல். அஃதாவது இங்குக் கோலம் எழுதக் கற்றுக் கொள்ளுதல். அஃது ஆகுபெயராய் அக்கல்வி வன்மையால் எழுதப்படும் கோலத்தைக் குறித்தது. எனவே, ‘கொங்கைமேல், கரத்தான் மேவு குங்குமத்தின் கோலம் அழியும் வண்ணம்’ - அஃதாவது, ‘கொங்கைமேற் சேரும் வண்ணம்’ எனக் கூறியதாம். கசிவித்தல் - மனத்தை இளகச் செய்தல், ‘யோகத்தில் இருந்த தன்னை (சிவனை)ப் போகத்தில் இச்சையுடையனாக்கும் பொருட்டு’ என்றவாறு அழகுடைமை பற்றித் திருமாலும் ‘வாமன்’ எனப்படுவான். பொற்பு - அழகு. எனவே, “வாமன்” என்பது வாளா பெயராய் நின்றது.
|