11. | முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தவடர் போற்றி! - நடுங்கத் |
12. | திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் - குருமாற |
13. | நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி! - சாலமண்டிப் |
14. | போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் - வீரம் |
15. | கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி! - தடுத்து |
கண்ணி - 9,10: தூமம் - தாருகாவனமுனிவர் செய்த வேள்வியின் புகை நடுவிலே. படம் எடுத்து வந்த பாம்புகள் வெகுண்டு பார்த்து தீங்கு செய்யவர அவைகளைப் பற்றி அணியாக அணிந்து. கண்ணி - 10,11: இவற்றில் முயலகன் வரலாறு சொல்லப்படுகின்றது. வேறு இடங்களில் இது பெறப்படவில்லை. ‘தாருகாவன இருடிகளால் அனுப்பப்பட்ட ஓர் அசுரன்’ என்னும் அளவில் சொல்லப்பட்டது.) உடன் தோன்றிய பாம்புகள் உமிழ்ந்த விடவேகத்தைத் தானும் உடையவனாய், அப்பாம்புகளைப் போலத் தானும் உடலை வளைத்துத் திருமேனியைச் சுற்றி வளைத்து வலித்த (இழுத்த) முயலக னுடைய மொய்ம்பை (வலிமையை) அடங்க மிதித்த திருவடிக்கு வணக்கம். கண்ணி - 11, 12,13: “நடுங்க” என்பதை, “குருமாற” என்பதன்பின் கூட்டுக. குரு - பாரம். அஃது ஆகுபெயராய் மலையைக் குறித்தது. மலை, மந்தரமலை. மாற - மாறி. மாறிக் கடைய. ‘அவர்கள் நடுங்க வந்தெழுந்த ஆலம்’ என இயையும். மால் கடல் - பெரிய கடல் ‘நாகத்தையும் பற்றி மாற’ என்க. நாகம், ‘வாசுகி’ என்னும் பாம்பு. நீலம் - நீல நிறத்தை யுடைய கடல் நீர். ஆகுபெயர் ‘நீர் முகில்போல் வந்தெழுந்த ஆலம்’ என்பதாம். அழல - துன்பத்தால் வருந்த. கண்டமாகிய அதற்கு வணக்கம். கண்ணி - 13,14,15: “சால மண்டி” என்பதை “மிக்கடர்க்கும்” என்பதற்குமுன்னே கூட்டுக. உகந்த - விரும்பிய. சால மண்டி - மிகவும் நெருங்கி அடர்க்கும். வருத்து கின்ற. தாருகன், ஓர் அசுரன். இவன் முருகக் கடவுளால் அழிக்கப்பட்ட தாரகனின் வேறானவன்.
|