பக்கம் எண் :

347போற்றித் திருக்கலிவெண்பா

35.பொற்பா கரைப்பிளந்து கூறிரண்டாப் போகட்டு
மெற்பா சறைப்போக மேல்விலகி - நிற்பால

36.மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி - விம்மி

37.அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி! - தொடுத்தமைத்த

38.நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ்
வாள்மாலை ஆகும் வகையருளித் - தோள்மாலை

39.விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த இறைபோற்றி! ஒட்டி

40.விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா நின்று - வசையினால்,

கண்ணி - 34-37: (இவற்றுள் கயாசுர வதம் கூறப்படுகின்றது. கயாசுரன் - யானை வடிவம் உடைய அசுரன். கயமுகாசுரன் இவனின் வேறாவன்.) பொன் - இரும்பு. கவை முகத்த பொன் - பல கிளைகளாகிய முகத்தையுடைய, இரும்பால் ஆன கருவி. அங்குசம் முதலியன. தன்னை அடக்க வந்த பாகர்களைக் கயாசுரன் கொன்றுவிட்டான். ‘மேல்’ என்பது ‘மெல்’ எனக்குறுகிநின்றது. பாசறைக்குப் போவதற்குத் தடையாகத் தன்மேல் வந்தவர்களை விலகப் பண்ணி. ‘விலகு வித்து’ என்பது விகுதி தொக, “விலகி” என்று ஆயிற்று. நில் பால - நின்ற பான்மையை யுடைய. தறுகண் - அஞ்சாமை; அதற்குப் ‘பசுமை’ என்னும் அடை கொடுத்தது, கெடாது நிற்றலைக் குறித்தவாறு. கண்ணி - 36 இன் முதலடியில் முரண்தொடை, அல்லது விரோத அணி வந்தது. இரைத்து - இரைச்சல் இட்டு. இசை - புகழ். ‘இறை’ என்பது பாடமன்று.

கண்ணி - 37,38,39: நாள் மாலை - நாள் மலர் மாலை; அஃதாவது அன்றலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை. நால்வர் - முனிவரர் நால்வர். ‘சனகர், சனந்தனர். சனாதனர், சனற்குமாரர்’ என்பர். வாள் - ஒளி; ஞானம். மாலை - தன்மை. ‘ஞானத்தின் இயல்பு விளங்கும் வண்ணம் அருளிச் செய்து’ என்க. விட்டு - ஒளிவீசி. தக்கிணம் - தெற்கு. குணம் எட்டு, சைவாகமங்களில் சொல்லப்பட்ட தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்கள். இலங்க - அம்முனிவரர்கட்கு விளங்கும்படி இறை - இறைத் தன்மை; அது முதல் நூல் செய்தல். எனவே, இஃது அறம் முதலிய நாற்பொருள்களைக் கூறிய பழைய தமிழ் நான்மறைகளை அருளிச் செய்ததைக் குறித்ததாம்.