பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை348

41.பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - நேசத்தால்

42.வாயில்நீர் கொண்டு மகுடந் துமிழ்ந்(து)இறைச்சி
ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துத் - தூயசீர்க்

43.கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி! - மண்ணின்மேல்

44.காளத்தி போற்றி! கயிலைமலை போற்றி!யென
நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ(டு)

45.எத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு.

திருச்சிற்றம்பலம்


கண்ணி - 39, 40, 41: ஒட்டி - வலிமை பேசி. ‘விசயன்’ என்பது, “விசையன்” எனப் போலியாயிற்று. விசயன் - அருச்சுனன். விசை - வேகம்; போராற்றல். ‘வேடன்’ என்பது ‘வேடு’ என்னும் சாதிப் பெயரால் கூறப்பட்டது. அசைய - அவன் தளர்ச்சி யடையும்படி. உடல் திரியாநின்று - உடம்பைக் குப்புறக் கீழ்மேலாக விழச் செய்து. வசையினால் - வசை வகையில் அமையும்படி, ‘பதைப்பு’ என்பது, எதுகை நோக்கி, “பதப்பு” எனத் திரிந்துநின்றது, மற்று, வினைமாற்று, பதம் - திருவடி. திருவருளை, ‘திருவடி’ என்றால் வழக்கு.

கண்ணி - 41, 42, 43: மகுடம் - தலை; ஆகுபெயர். ‘சிவ பெருமானை, ‘வேடர்’ என்று இகழ்ந்த அருச்சுனனே பின்பு வேடர் குலத்தில் கண்ணப்ப நாயனாராக அவதரித்துக் காளத்தியில் சிவபெருமானை வேடுவராயே இருந்து வழிபட்டு முத்தி பெற்றான்’ எனச் சீகாளத்திப் புராணம் கூறும். அதற்கேற்ப இங்குக் கண்ணப்ப நாயனார் செய்தி அருச்சுனன் செய்தியை அடுத்துக் கூறப்பட்டது. வட கயிலையில் சிவபெருமானோடு போராடிய அருச்சுனன், மறுபிறப்பில் தென்கயிலாயத்தில் சிவபெருமானை வழிபட்டு ஆறே நாளில் முத்தி பெற்றான் போலும்!

கண்ணி - 43,44,45: நீளத்தினால் - கால வரையறை யின்றி. ‘ஆங்குச் சேர்வார்கள்’ என்க. ஆங்கு - சிவலோகத்தில். எனவே, இங்கு ‘இமையோர்’ எனப்பட்டவர் சிவகணங்கள் ஆவர். ‘இவ்வுலகில் சிவபெருமானை அவனது திருப்புகழ் பலவற்றையும் எடுத்தோதிப் போற்றி செய்தவர்கள் அவ்வுலகில் இமையோர் போற்றி செய்ய விளங்குவர்’ என்றபடி.

போற்றித் திருக்கலிவெண்பா முற்றிற்று