அடி-37: வெள்ளில் குறு முறி கிள்ளுபு காண் வரத் தெறியா - விளா மரத்தினது குறுந்தளிரைக் கிள்ளி அழகு உண்டாக (விளையாட்டாக) ஒருவர்மேல் ஒருவர் வீசி. ‘வெற்பின்கண் உள் சோலை’ எனவும், ‘சூர் அர மகளிர் ஆடும் சோலை’ எனவும் இயைத்து, ‘சோலையை யுடைய அடுக்கத்துப் பூத்த காந்தள் கண்ணி மிலைந்த சென்னியன்’ என முடிக்க. ’13, சீறடியையும், 14. கணைக் காலையும் நுசுப்பையும், பணைத் தோளையும், 15, துகிலையும், 16. அல்குலையும், 17. வனப்பையும், 18. இழையையும், 19. மேனியையும் உடைய, 41. ‘சூர் அர மகளிர் 39. பலர் உடனாகி, 20. ஓதியில், 21. வெட்சி இதழின் இடையில், 22. குவளை இதழ்களை இட்டு, 23. (தலையில்) தெய்வ உத்தியொடு வலம்புரி வைத்து, 25. நுதலில் மகரம் தாழ மண்ணுறுத்து, 26. முச்சியில் 27. சண்பகம் செரீஇ, 28. மருதின் இணர் அட்டி, 30. பிணையல் வளைஇ, 32. திளைப்பச் செய்து, 34. தேய்வை 35. முலைக் கொட்டி அப்பி, 37. தெறியா, 39. ஏத்தி, 40. ஆடும் சோலை’ என்க. அடி-46: சூர் முதல் - சூரபன்மாவாகிய தலைவனை. அடி-45, 46: கடல் கலங்க உள்புக்குத் தடிந்த வேல் - கடல் கலங்கும்படி அதனுள்ளே புகுந்து அழித்த வேற்படை யாகிய (61 செவ்வேல்) சூரபன்மா கடலுள் ஒளித்தானாகலின் வேல் கடலுள்ளே புகுந்து அவனை அழித்தது. அடி-57, 58, 59: இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை அறுவேறு வகையின் அவுணர் அஞ்சு வர மண்டி - இருவகையை பெரிய உருவத்தினாலே அத்தன்மையைக் குறிக்கும் ஒரு பெயரை உடைய அவுணர்களது உடம்புகள் அற்று வேறாம்படி அவர்கட்கு அஞ்சுதல் வர நெருங்கிச் சென்று. அடி-59: நல் வலம் அடங்க - அவர்களது மிக்க வலிமை அற்றுப் போம்படி. அடி-60, 61: மா முதல் தடிந்த செவ்வேல் - மா மரத்தை அடியோடு அழித்த சிவந்த வேலையும். அடி-59: கவிழ் இணர் - கீழ் நோக்கிய பூக்களின் கொத்துகளையுடைய (60-மாமரம்.) சூரபதுமனுடைய படைகளில் குதிரை முகத்தை உடைய அசுரர்கள் சிறப்புப் பெற்று இருந்தனர்’ என்பதும், ‘அசுரர் அனைவர்க்கும் பாதுகாவலாகத் தென்கடலில் மாமரம் ஒன்று இருந்தது’ என்பதும் பழமையான சிவபுராண வரலாறுகள். இவ் அசுரர்களது உடம்பே இங்கு “இருவே குருவின் ஒருபேர் யாக்கை” எனக் குறிக்கப்பட்டது. இவை கந்த புராணத்தில் காணப்படவில்லை.
|