அடி-52, 53: குருதி ஆடிய கூர் உகிர்க்கொடு விரல் கண் தொட்டு உண்ட கழிமுடை - இரத்தத்திலே தோய்ந்த, கூர்மையான நகங்களையுடைய வளைந்த விரலாலே கண்களை அவள் தோண்டி உண்ட, மிக்க முடை நாற்றத் தையுடைய (கருந்தலை) ‘3. செண் விளங்கு அவிர் ஒளியையும், 4. நோன் தாளையும், 5. தடக் கையையும் உடைய கணவனும், 10, 11. மராத்துப் பூந்தளிர்தார் புரளும் மார்பினனும், 12. சேண் உயர் வெற்பில் உள்ள, 41. அர மகளிர் ஆடும் சோலையை உடைய 42. அடுக்கத்து 43. காந்தள் 44. கண்ணி மிலைந்த சென்னி யனும், 46. சூர் முதல் தடிந்த நெடிய வேலாகிய, 51. பேய் மகள் 56. துணங்கை தூங்கும்படி 59. அவுணர் வலம் அடங்க 60. மா முதல் தடிந்த 61. சிவந்த வேலினையும், 60. மறு இல் கொற்றத் தினையும், 61. நல் இசையினையும் உடையவனும் ஆகிய சேய்’ என இயைத்துக் கொள்க. அடி-61, 62, 64: சேய் சேவடி படரும் உள்ளமொடு. செலவ - முருகனையே எப்பொழுதும் நினைத்தலால் தலைமை பெற்ற உள்ளத்தோடே செல்லும் செலவை உடைய புலவனே. செம்மல் - தலைமை பெற்ற (உள்ளம்) அடி-63. 64: நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும் - நன்மையை விரும்பும் கோட்பாட்டினால், (அலைவைத் தரும்) புலன் இன்பங்களினின்றும் நீங்கி, (நிலைப்பைத் தரும் இன்பத்திலே) தங்குதலைப் பயனாக உடைய (64 செலவ) அடி-64: நீ நயந்தனையாயின் - அங்ஙனம் உறைதலாகிய பயனை நீ விரும்பியே விட்டாயாயின், பலவுடன் - அப்பயனே யன்றி ஏனைப் பல பயன்களுடனும், (‘பலவற்றுடன்’ - என்பதில் சாரியை தொகுத்தலாயிற்று.) அடி-65, 66: நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப நீ முன்னிய வினை இன்னே பெறுதி - நன்றான உனது நெஞ்சத்திலே எழுந்த இனிய விருப்பம் நிறைவுறுதற்பொருட்டு நீ கருதி மேற்கொண்ட வினையாகிய செலவின் பயனை இப்பொழுதே பெறுவாய். (அஃது எங்ஙனம் எனில், முருகனை அவன் இருக்கும் இடத்தில் சென்று பணிதலால், பணிதற்கு அவன் இருக்கும் இடம் எதுஎனின், ஏனையோர் போல அவன் இருக்குமிடம் ஒன்றன்று; பல. அவை யாவை யெனின்,) “வினை” என்றது செலவை. அஃது ஆகுபெயராய் அதன் பயனைக் குறித்து நின்றது. அடி-71, 77: கூடற் குடவயின் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றத்தில் விரும்பி உறைதலையும் அவன் தனக்கு உரிமையாக உடையன். (எனவே, ‘அங்குச் சென்றாலும் அவனைக் காணலாம்’ என்பதாம்.
|