மலர்ந்த (மலர் எனவே, ‘இவை நீலப்பூ’ என்பது பெறப்படும்.) காமர் - (காண்பாரது) விருப்பம் பொருந்துகின்ற (மலர்). (‘காமம் மரு’ என்பது “காமர்” என மருவிற்று. அடி-77: அதாஅன்று - அதுவன்றியும் இனி ‘அம்முருகன் தனது ஆறு முகங்களும், பன்னிரண்டு தோள்களும், ‘கைகளும் விளங்க யானைமேல் ஏறி, வானில் பல வாச்சியங்கள் ஒலிக்கத் திருச்சீரலைவாயை நோக்கி வான் வழியாகச் செல்லலும் உரியன்’ என்பது கூறப்படுகின்றது. அடி-79: வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூரிய நுனியை உடைய அங்குசம் குத்தின வடு சூழ்ந்து காணப்படு கின்ற, பல புள்ளிகளையுடைய நெற்றியில். அடி-80: வாடா மாலை ஓடையொடு துயல்வர - வாடுதல் இல்லாத பூவாகிய பொன்னால் ஆகிய அரிமாலை நெற்றிப் பட்டத்துடன் இருந்து அசைய. அடி-81: படு மணி இரட்டும் மருங்கின் - இரு பக்கமும் பொருந்தின மணிகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும், கடு நடை - வேகமாக நடக்கும் நடையினையும். அடி-82: கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் வேழம் மேல் கொண்டு - கூற்றுவனைப் போலத் தடுக்க இயலாத வலிமையினையும் உடைய யானையை ஏறி. அடி-83: கால் கிளர்ந்து அன்ன - (ஓடும் வேகத்தால்) காற்று எழுந்தாற் போலக் காணப்படுகின்ற (வேழம்). அடி-84, 85: ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திருமணி - ஐந்து வகையான வேறுபட்ட உருவம் உடையனவாகச் செய்யப் பட்ட செயற்பாடுகளெல்லாம் முற்ற முடிந்த முடிகளோடு கூடி விளங்குகின்ற, மாறுபாடு மிக்க நிறங்களை யுடைய மணிகள். (ஐவேறு உரு - தாமம், முகுடம், பதுமம், கிம்புரி, கோடகம் என்பன.) அடி-86: மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப - மின்னலொடு மாறுபட்டு விளங்கும் விளக்கத்துடன் தலையிலே பொலிவுபெற. அடி-87: நகை தாழ்பு துயல் வரூஉம் வகை அமை பொலம் குழை - ஒளியோடு தாழ்ந்து அசைதல் வரும் வகையாக அமைந்த, பொன்னால் இயன்ற மகரக் குழைகள். அடி-88, 89: சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப - நெடுந் தொலைவு சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய திங்களைச் சூழ்ந்து
|