நீங்காதுள்ள மீன்களைப் போல விட்டு விட்டு விளங்குவனவாய் ஒளியை வீச. அடி-90, 91: தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகன் - குற்றம் இல்லாத கொள்கையையுடைய தங்கள் தொழிலை முடிப்பவரது மனத்தை ஏற்று அவண் தோன்றுகின்ற ஒளிவீசும் நிறத்தை யுடைய முகங்களில் (குற்றம் இல்லாத கொள்கையை யுடைய தொழிலாவது தவம். ‘தவத்தோர் மனத்தை இருத்தற்குரிய இடமாக ஏற்று, அங்கு விளங்கும் முகங்கள்’ - என்றபடி. இஃது ஆறு முகங்களையும் பொதுவாகச் சுட்டிச் சொல்லியது.) அடி-92, 93: ஒரு முகம் மா ஞாலம் இருள் மறு இன்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று - ஒரு முகம் - பெரிய உலகம் இருளாகிய குற்றம் தீர்ந்து ஒளியைப் பெறும்படி பல கதிர் களைப் பரப்புதலை உடைத்தாயிற்று. (‘எல்லாச் சுடர்களின் ஒளிகளும் முருகன் அருளிய ஒளியை யுடையனவே’ என்றபடி.) அடி-93, 94, 95: ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் வரம் கொடுத்தன்றே - மற்றொரு முகம், அன்பர்கள் துதிக்க, அத்துதியை விரும்பி ஏற்று அவர்க்கு ஏற்ப இயங்குதலை உடைத்தாய், அவர்கள் மேல் எழுந்த பேரருள் காரணமாக மகிழ்தலைச் செய்து, அவர்கள் விரும்பிய பொருளை முடிப்பனவாகிய மெய்ம் மொழியை வழங்கியே இருந்தது. (வரம் - விரும்பிய பொருள். அஃது ஆகுபெயராய், அதனை முடிப்பதாகிய சொல்லைக் குறித்தது. ஏகாரம் தேற்றம். இனி வருவனவும் அவை.) அடி-95, 96, 97: ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழா வேள்வி ஓர்க்குமே - மற்றொரு முகம், மந்திரத்தோடு கூடிய விதிமுறைகளினின்றும் வழுவாத வேள்விகள் இனிது முடியும் வண்ணம் நினைந்து நோக்கியே இருக்கும். அந்தணர் - அந்தணரது (வேள்வி. அம் தணர் - அழகிய தட்பத்தை - கருணையை - உடையவர். அக்கருணை காரணமாகச் செய்யப்படும் வேள்வி உலக நலத்தைப் பயக்கும் ஆகலின், அவற்றை முருகன்! இனிது முடிய வேண்டுவானாவன். பல வகை வழிபாடுகளும் வேள்விகளே. கருணை காரணமாக உலக நலத்தின்பொருட்டுச் செய்யும் வழிபாடு. ‘பரார்த்த பூசை’ எனப்படும். அவன் ஆன்மார்த்த பூசையைக் காத்தல் இதற்கு முன் கூறிய அதனுள்ளே அடங்கிற்று.) அடி-97, 98, 99: ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏம் உற நாடித் திங்கள்போலத் திசை விளக்குமே - மற்றொரு முகம், வேள்வி யொழிந்த பிற பொருள்களையும் அவை பாதுகாவல் பெறும்படி நினைந்து, திங்களைப் போல எல்லாத் திசைகளையும் இடரின்றி விளங்கச் செய்தே இருக்கும்.
|