அடி-99, 100, 101: ஒரு முகம் செறுநர் தேய்த்துச் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே - மற்றொரு முகம், பகைவரை அழித்து நிகழாநின்ற போரினை வெற்றியாக முடித்துப் பின்னும் பகைவர் தோன்றாதவாறு வெகுள்கின்ற நெஞ்சத்தோடே கள வேள்வி வேட்டே யிருக்கும். (கறுவு - நீடு நிற்கின்ற பகைமை யுணர்வு. அது கொடியார் மேலதாதலின் அறமாயிற்று. “தேய்த்து” என்னும் செய்தென் எச்சம் பின் வரும் செல்லுதல் வினைக்கு நிகழ்காலம் உணர்த்தி நின்றது. அடி-101, 102, 103: ஒரு முகம் குறவர் மடமகள் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - மற்றொரு முகம், குறவர்தம் இளைய மகளாகிய வள்ளியொடு மகிழ்ந்திருத்தலை விரும்பியே இருந்தது. கொடிபோல் நுசுப்பின் - கொடிபோலத் துவள்கின்ற இடையினையுடைய (வள்ளி). மட வரல் - ‘மடம்’ என்னும் குணத்தினது வருகையைப் பொருந்திய (வள்ளி மடமாவது, கொளுத்தக் கொண்டு, கொண்டது விடாமை. இது பெண்மைகளுள் ஒன்று.) அடி-103, 104, 105: அம் மூவிரு முகனும் ஆங்கு முறை நவின்று ஒழுகலின் - அந்த ஆறு முகங்களும் அவ்வாறான முறைகளில் பயின்று நிகழ்தலால். (119 பன்னிரு கையும் இயற்றி). அடி-105, 106: ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய - பொன்னரி மாலை தங்கிய, அழகிய, விளக்கமான மார்பின் கண் உள்ள செவ்வையான கீற்றுகளைத் தம்மிடத்தே வருமாறு வாங்கி வைத்துக் கொண்ட (107 தோள் மார்பில் மூன்று கீற்றுக்கள் தோன்றித் தோளளவும் சென்றிருத்தல் சிறந்த ஆடவர்க்கு உள்ள இயல்பாகக் கூறுப்படுகின்றது.) அடி-106, 107, 108: மொய்ம்பின் வண்புகழ் நிறைந்து - வலிமையினாலே வளவிய புகழ் நிறையப் பெற்று. சுடர் விடுபுவாங்கு - ஒளி பொருந்திய படைக்கலங்களை ஏவிப் பகைவர்களது மார்பைப் பிளந்த பின்பு வாங்கிக் கொள்கின்ற (107 தோள்) நிமிர் தோள் - பருத்த தோள்களில் உள்ள. (சுடர், ஆகுபெயர்). அடி-109, 110: ஒரு கை விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - ஒருகை, (உலகம் ஞாயிற்றின் வெம்மையால் அழியாதபடி அதனைத் தாங்கி) எப்பொழுதும் வானத்தில் உலாவிக்கொண்டிருக்கின்ற அறவோர்களைத் தாங்கி உயரச் சென்றது. (நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் - தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவாகச் சுடரொடும் கொட்கும் - அவிர்சடை முனிவர்” என்றது1 காண்க.) ஒரு கை உக்கம் சேர்த்தியது - அந்தக் கைக்கு இணையான மற்றொருகை இடையின்கண் வைக்கப்பட்டது. (இதற்குத் தொழில் இன்மையால் வாளா இடையின்கண் வைக்கப் பட்டது. இந்த
1. புறம் - 41.
|