வாழ்க்கைத் தலைவனாகக் கொள்ள விழைந்த மகளிர்க்கு அவரது கருத்து நிரம்புமாறு அருளுதலைக் குறித்தது. எனவே, வதுவை சூட்டுங் கை வள்ளி யொடு நகை யமர்ந்த முகத்திற்கு ஏற்புடைத்தாதல் தெளிவு. இனி மழை பொழிவிக்கின்ற கையும் மண வாழ்க்கையை ஏற்றோர் இல்லறம் நடத்துதற்கு முதற்கண் வேண்டப்படும் மழை வளத்தைத் தருவதாதலும் தெள்ளிதேயாம். அடி-118, 119: ஆங்கு அப்பன்னிரு கையும் பாற்பட இயற்றி - அவ்வாறு அப் பன்னிரண்டு கைகளும் ஆறு முகங்களின் வகையில் பொருந்தும்படி பல தொழில்களைச் செய்து. அடி-120: அந்தரப் பல் இயம் கறங்க - வானுலக வாச்சியங்கள் பலவும் ஒலிக்க. அடி-120, 121: திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு ஒலி நன்கு எழுந்து ஒலிக்க. (‘கொம்பு’ எனப்படுவது தாரை, இதன் ஓசை வடமொழியில் ‘சிருங்க நாதம்’ எனப்படும்) வால் வளை ஞரல - வெண்மையான சங்கு முழங்க. அடி-122: உரம் தலைக் கொண்ட உரும் இடி முரசமொடு - வலிமையைத் தன்னகத்துக்கொண்டு இடி இடித்தாற்போலும் முரசொலியுடன். அடி-123: வெல்கொடி பல் பொறி மஞ்ஞை அகவ - லென்று எடுத்த கொடியிலே பல புள்ளிகளை யுடைய தோகையை உடைய மயில் அகவாநிற்க. அடி-124: விரை செலல் முன்னி - விரையச் செல்லுதலைக் கருதி. விசும்பு ஆறாக - வான் வழியாக. அடி-125, 126: உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் - உயர்ந்தோர் புகழ்ந்த மிக உயர்ந்த மேலான புகழையுடைய. அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு - (கடல் அலை மோதும் இடம் ஆதலின்) ‘அலைவாய்’ என்னும் பெயருடைய திருத்தலத்திற்கு அவ்வப் பொழுது சென்று தங்குதலும் அவனுக்கு நிலை பெற்ற குணமாகும். (ஆகவே, அங்குச் சென்றும் அவனைக் காணலாம். 83. ‘வேழம் மேல்கொண்டு, 85 முடியொடு விளங்கிய திருமணி 86 சென்னிப் பொற்ப, 88 பொலம் குழை 89 இமைப்ப, 104 மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின், 119 பன்னிரு கையும் பாற்பட இயற்றி, 120 பல் இயம் கறங்க, 121 வயிர் இசைப்ப, வளை ஞரல, 122 முரசமொடு 123 மஞ்ஞை அகவ 124 விரை செலல் முன்னி விசும்பு ஆறாக அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு’ என இயைத்து முடிக்க. அடி-127: அதாஅன்று - அதுவன்றியும்.
|