யானையின் பிடரியில் ஏறிவரும் (செல்வன்) திருக்கிளர் செல்வனும் - நல்லூழால் மிகுகின்ற செல்வத்தை யுடையவனும். (இந்திரனும்) அடி-165, 166: உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக - உலகத்தைச் செல்வன் நடத்துதலாகிய ஒன்றையே விரும்புகின்ற கொள்கை காரண மாகப் பலராலும் போற்றப்படும் ‘அயன், அரி, அரன்’ - என்னும் மூவரும் ஒத்த தலைவராய் இருக்கவும். அடி-164: நால் பெருந் தெய்வத்து - நான்கு திசைகளிலும் ஞாயிறு, நடுவன், வருணன், திங்கள் ஆகிய பெரிய தேவர்களையுடைய (உலகம்) நல் நகர் நிலைஇய - நல்ல நகரங்கள் பல நிலை பெற்றிருக்கும் (உலகம்) அடி-167, 169: ஞாலம் தன்னில் தோன்றி ஏம் உறும் நான்முக ஒருவன் சுட்டி - (அத்தலைமையை இழந்து) மண்ணுலகில் பிறந்து மயங்குகின்ற பிரமனாகிய ஒருவனை மீட்டல் கருதியே சென்று. (‘சென்று’ என்பது சொல்லெச்சம்.) அடி-168: தாமரை பயந்த தாஇல் ஊழி - ‘தாமரை’ என்னும் எண்ணினைத் தருகின்ற வருத்தம் இல்லாத ஊழிகளைத் தன் வாழ்நாளாக உடைய (நான்முகன். தாமரை - ‘பதுமம்’ எனப் பெயர் பெற்ற ஒரு பேரெண் நான்முகன் தன் தலைமையை யிழந்து மண்ணில் சென்று மயங்கக் காரணம் முருகன் இட்ட சாபம். அஃது, அசுரரை அழித்துத் தனது அரசினை நிலைபெறுத்தினமைக்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகளார் தெய்வயானையாரை மணம்புரிவித்த ஞான்று முருகன், ‘இச் சிறப்பெல்லாம் நமக்கு இவ் வேலால் வந்தன’ என்று சொல்லி வேலினைப் பார்க்க, அங்கிருந்த நான்முகன், ‘இவ்வேலிற்கு இவ்வாற்றல் என்னால் தரப்பட்டது’ என்றான். அங்ஙனம் அவன் கூறியது, ‘எல்லாவற்றையும் படைப்பவன் தான்’ - என்னும் செருக்கினாலாம், அதனால் முருகன், ‘இவன் இத்தலைமையைப் பெற்றது எவ்வாறு’ என்பதை மறந்து செருக்கின்றான் எனச் சினந்து, ‘நீ உனது சத்திய லோகத்தை விட்டு மண்ணுலகில் புகக்கடவாய்’ எனச் சபித்ததேயாம். இது பழம் புராணமாகச் சொல்லப்படுகின்றது.1) அடி-141: முனிவர் முன்புக - (தங்கள் வேண்டு கோளின் படி) முனிவர்கள் முன்னே புகுத. (வருகையை முருகன் மறுக்கா திருத்தற்காக முனிவர்களை முன்னே விடுத்தனர்.) அடி-130: சீரை - மரவுரியை. தைஇய உடுக்கையர் - உடையாக அமைக்கப்பட்டதனை உடுத்தலை உடைய வர்களும்.
1. நச்சினார்க்கினியர் உரை.
|