அடி-140, 141: மேவர துனி இல்காட்சி - யாவருடைய உள்ளமும் விரும்புதல் உண்டாகத் தாம், ‘எந்நாளும் இன்பமே யன்றித் துன்பம் இல்லை”1 என மகிழ்ந்திருக்கும் தோற்றத்தினை உடையவர்களும் ஆகிய (முனிவர்கள்) அடி-145, 146: நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் மெல் மொழி மேவலர் இன் நரம்பு உளர - நல்லதாகிய யாழினது இசையிலே பயின்ற பயிற்சியால் இளகிய மனத்திலே (வன்சொல்லை விரும்பாது) மென்சொல்லையே விரும்புகின்ற கந்திருவர்கள் இனிய இசையைத் தோற்றுவிக்கின்ற யாழின் நரம்புகளைத் தடவி இசையை இசைத்துக் கொண்டு வரவும். அடி-142: புகை முகந்தன்ன மாசில் தூவுடை - (மென்மையால்) புகையை ஒருங்கியையச் சேர்த்து வைத்தாற் போலும், அழுக்கில்லாத தூய உடையையும். அடி-143: முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - (கட்டிய பின்) அரும்புகள் வாய் மலர்கின்ற மாலை சூழ்ந்த மார்பினையும் உடைய (கந்தருவர்) தகைதல் - கட்டுதல். அஃது ஆகுபெயராய், கட்டப்பட்ட மாலையைக் குறித்தது. அடி-151: மாசு இல் மகளிரொடு - (உடம்பிலும், குணத்திலும்) யாதொரு குற்றமும் இல்லாத கந்தருவ மாதரோடு கூடி (‘இன் நரம்பு உளர’ என மேலே கூட்டுக.) அடி-147: நோய் இன்று இயன்ற யாக்கையர் - (தேவர் ஆதலின்) மக்கள் யாக்கை போல நோய் உடையன ஆகாது. நோய் இல்லனவாய் அமைந்த உடம்பினையும். அடி-147, 148: மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மா மரத்தினது விளக்கமான தளிர்களை ஒத்த நிறத்தினை யுடையவரும். அடி-148, 149: அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னை உரைத்த உரை விளங்குதல் போலக் காணப்படுகின்ற தேமலையுடையவரும். அடி-149, 150: இன் நகைப் பருமம் தாங்கிய அல்குல் - இனிய ஒளியை உடைய பதினெண் கோவை மணிவடங் களைத் தாங்கிய பிருட்டத்தினை உடையவரும் (ஆகிய மகளிர்) பணிந்து ஏந்து அல்குல் - தாழ வேண்டிய பகுதி தாழ்ந்தும், உயர வேண்டும் இடம் உயர்ந்தும் உள்ள (அல்குல் - பிருட்டம்) அடி-151: மறுஇன்றி விளங்க - (பண்கள் பலவும்) குற்றம் இன்றி வெளிப்படும்படி. (‘இன் நரம்பு உளர’ என மேலே கூட்டுக.)
1. திருமுறை - 6.98.1.
|