பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை380

உடையன். (மேற் கூறியவாறு, ‘முருகனது சாபத்தால் மண்ணிடைப் போந்து மயங்கிக் கிடக்கின்ற. நான்முகனைச் சாப விடுதி செய்து முன்பு போலத் தங்களுடன் இருக்கும்படி மீட்டுக்கொள்ள வேண்டித் திருமாலும், உருத்திரனும், இந்திரனும் முருகனைத் திருவாவினன்குடியில் சென்று, தெய்வயானையாருடன் இருக்கக் கண்டனர்’ என்க.

‘நான்முக ஒருவனைச் சுட்டி, புள்ளணி நீள் கொடிச் செல்வனும், மூவெயில் முருக்கிய செல்வனும், நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்துச் செல்வனும், முனிவர் முன்புக, யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி, மேவலர், மாசில் மகளிரொடு மறு இன்றி விளங்க இன் நரம்பு உளர, நால் வேறு இயற்கைப் பதினொருமூவரும், ஒன்பதிற்றிரட்டி உயர்நிலை பெறீஇயரும். தோன்றலராயும், செலவினராயும், குரலினராயும் கொட்பினராயும் உடன் வர, தம் உறு குறை கொண்மார் காண அசைதலும் உரியன்’ என இயைத்து முடிக்க. (எனவே, ‘அப்பொழுது அங்குச் செல்லினும் அவனைக் காணலாம் என்பதாம். நான்முகனை வீடு செய்த பின்பும் அன்பர் பொருட்டாக முருகன் முன் இருந்த குலத்துடன் ஆவினன் குடியில் இருத்தல் பற்றி, ‘அங்குச் செல்லினும் காணலாம்’ என்பது கூறப்பட்டது.

அடி-181: அதாஅன்று - அதுவன்றியும்

அடி-182, 183: இரு மூன்று எய்திய இயல்பினின் வழாது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என ஆறாகப் பொருந்திய ஒழுக்கத்தினின்றும் வழுவாமையால், ‘தாய், தந்தை’ என்னும் இருவரராலும் உயர்த்துக் கூறப்பட்ட, பலவாய் வேறுபட்ட பழைய குடிகளில் பிறந்த (187 இருபிறப்பாளர்).

அடி-184, 185: அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய - ஆறாகிய நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டாகிய, இளமைப் பருவத்தை யுடைய நல்ல யாண்டுகளை நன்முறையிலே கழித்த (187 இருபிறப்பாளர்) ‘நன்முறை’ என்றது பிரமசரிய ஒழுக்கத்தை.

அடி-185: அறன் நவில் கொள்கை - அறநூல்களில் சொல்லப்பட்ட கொள்கைகளையே தம் தம் கொள்கையாக உடைய (187 இருபிறப்பாளர்)

அடி-186: மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து - ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி’ - என மூன்றாக்கப்பட்ட வேள்வித் தீயாகிய செல்வத்தையுடைய. 187 இருபிறப் பாளர். ஆகவனீயம், முதலிய மூன்று தீக்களும் முறையே சதுரம், முக்கோணம், வில் வளைவு ஆகிய வடிவில் அமைக்கப்படும் குண்டங்களில் வளர்க்கப்படும். அவ்வடிவங்கள் முறையே நிலம்,