பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை382

அடி-199: கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர் - கொடிய தொழிலை உடைய வலிய வில்லாலே பல விலங்குகளைக் கொன்ற வேட்டுவர்கள்.

அடி-200: நீடு அமை விளைந்த தேன் கள் தேறல் - நீண்ட மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் புதைத்து வைத்ததனால் நன்கு புளிப்பேறின, (அவர்கட்குத்) தேன் போல்வதாகிய கள்ளின் வடித்தெடுத்த தெளிவை.

அடி-201: குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து - சிறு குன்றுகளின் இடையே உள்ள ‘சிறுகுடி’ எனப் பெயர் பெற்ற ஊரின்கண் தங்கள் சுற்றத்தாருடனே உண்டு மகிழ்ந்து.

அடி-202: தொண்டகச் சிறுபறைக் குரவை அயர - ‘தொண்டகம்’ என்னும் அந்நிலத்துச் சிறிய பறையைக் கொட்டி, அக்கொட்டுக்கு ஏற்ப, ‘குரவை’ என்னும் கூத்தினை ஒரு பக்கத்திலே ஆட, (பலர் கைகோத்து நின்று ஆடுவது குரவைக் கூத்து.)

அடி-195: வேலன் - குறிஞ்சி நிலத்துப் பூசாரி. (இவன் ‘முருகனுடைய வேல்’ என்று சொல்லி எப்பொழுதும் வேல் ஒன்றைக் கையில் வைத்திருத்தலால் - வேலன் - எனப் பெயர் பெற்றான். பைங்கொடி நறைக் காய் இடை இடுபு அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன் - பச்சைக் கொடியாலே நறிய சாதிக் காய்களை இடையிடையே யிட்டு, அழகிய உள்ளே பொதிவுடையது போலத் தோன்றும் புட்டில் வடிவாகிய ஏலக்காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் சேர்த்து வெண் தாளி மலரைத் தொடுத்த கண்ணியை உடையவனாய் (கண்ணி - தலையில் அணியும் மாலை.)

அடி-203: விரல் உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங் கான் - விரலாலே வலிய மலர்த்தினமையால் வேறுபட்ட நறுமணத்தையுடைய.

அடி-204: குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - ஆழ்ந்த சுனையிலே பூத்த பூக்களால் தொடுக்கப்பட்டு வண்டுகள் மொய்க்கின்ற தலைமாலையையும்.

அடி-205: இணைத்த கோதை அணைத்த கூந்தல் - பூக்களை இணைத்துக் காட்டிய மாலையையும் முடித்த கூந்தலினையும்.

அடி-206: முடித்த குல்லை - பலகாலும் முடித்துப் பழகிய கஞ்சங் குல்லையினையும். இலை உடை நறும் பூ - இலைகளையுடைய வேறு பல பூக்களையும்.

அடி-207: செங்கால் மராத்த வால் இணர் இடை இடுபு - சிவந்த காம்புகளையுடைய, மராமரத்தில் உள்ளனவாகிய, வெண்மையான பூங்கொத்துக்களை இடையிடையே வைத்து.