அடி-221: மெல் தோள் பல் பிணை இயல - மெல்லிய தோள்களையுடைய, மான்போலும் மகளிர் பலர் குரவை யாடி வர. அடி-220: முழவு உறழ் தடக் கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து - மத்தளம் போலும் தோளோடு கூடிய பெரிய கைகளில் அவர்களை ஏந்தித் தழுவி முதற்கை கொடுத்து. (முதற் கை கொடுத்தலாவது, முன்னே இவன் கை கொடுக்கப் பின்னே அம்மகளிர் அதனைப் பற்றிக் கொண்டு ஆடுதல்) அடி-222: குன்று தோறு ஆடலும் நின்ற தன் பண்பு - மலைகள்தோறும் ஆடும் அவ் ஆடலில் தான் பொருந்தி நிற்றலும் நிலையான அவனது பண்பு. (எனவே, ‘அவ்வாடல் களிலும் அவனைக் காணலாம்’ என்பதாம்.) கானவர் கள் தேறலை கிளையுடன் மகிழ்ந்து குரவை அயர, வேலன் கண்ணியனாய், மடநடை மகளிரோடும், இன்குரல் தொகுதியோடும், செய்யனாயும், ஆடையனாயும், காதினனாயும், கண்ணியனாயும், குழவனாயும், கோட்டனாயும், இயத்தனாயும், தகரனாயும், மஞ்ஞையனாயும், கொடியனாயும், நெடியனாயும், தோளனாயும், துகிலனனாயும் பல் பிணை இயலத் தடக் கையின் ஏந்தித் தழீஇத் தலைத் தந்து ஆடலும் தன் பண்பு’ என இயைத்து முடிக்க. தன்னை முருகனாகவே எண்ணும் எண்ண வலிமையால் வேலன் ஆடும் ஆடல்களை முருகன் தன்னுடைய ஆடலாகவே ஏற்று அந்நிலத்து மக்களுக்கு அருள்புரிந்து வருதலின், ‘அந்நிலத்துச் சென்று அவன் வழியாகவும் நீ கருதியதைப் பெறலாம்’ என முன்பே அப்பேற்றைப் பெற்ற புலவன் கூறினான். அடி-223: அதாஅன்று - அதுவன்றியும். அடி-224: சிறு தினை மலரொடு விரைஇ - சிறிய தினை அரிசியைப் பூக்களோடே கலந்து (பரப்பி, இதன்மேல் பிரம்பை, மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டுப் பூச்சூட்டி நாட்டி வைப்பர். அதனால் இதன் கீழ் பரப்பப்படும் அரிசி ‘பிரப்பரிசி’ எனப்படும். “விரைஇ” என்பதன்பின், ‘பரப்பி’ என்னும் சொல்லெச்சம் வருவிக்க.) மறிஅறுத்து - செம்மறியாட்டுக் கிடாயைப் பலியிட்டு. (இவை தீய தெய்வங்களை மகிழ்வித்தற் பொருட்டுச் செய்யப்படுவன.) அடி-225: வாராணக் கொடியோடு வயின்பட நிறீஇ - கோழிக் கொடியைக் கோயிலின் முன் உயர்த்துக் கட்டி, அதனையுடைய அவ்விடத்திலே பொருந்தத் தன்னை (முருகனை மந்திரங்களால்) நிறுவி.
|