பக்கம் எண் :

385திருமுருகாற்றுப்படை

அடி-226: ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர்கள்தோறும் எடுத்த சிறப்புப் பொருந்திய விழாக்களிலும் (அவன் உறைவன்.)

அடி-227: ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் - அன்பர்கள் துதிக்க, அதற்குத் தான் விரும்புதல் வருகின்ற இடங்களிலும் (அவன் உறைவான்)

அடி-228: வேலன் தைஇய வெறி அயர் களனும் - வேலன்1 அணிசெய்த வெறியொடு களத்திலும் (‘வேலன் வேண்டுதலுக்காக அப்பொழுது உறைவான். வெறி - செம்மறி யாட்டுக் கிடாய். அதனைப் பலியிட்டு ஆடும் வழிபாடு வெறி யாடுதலாகும். அயர்தல் - கொண்டாடுதல். வெறியாடுதல் பெரும்பாலும் அகத்திணை நிகழ்ச்சிக் குரியதாய் வரும். அஃதாவது களவொழுக்கத்தில் தலைவனைக் காண்டால் அருமையால் தலைவி வேறுபாடுற, அதனைச் செவிலியும், நற்றாயும் தெய்வத்தான் ஆயதாகக் கருதி வேலனை அழைத்து வெறியாடுவித்துக் குறிகேட்டல் முதலியன செய்வர். எனினும் சிறுபான்மை வெட்சியாகிய புறந்திணையிலும் வருதல், “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்”2 என்னும் தொல்காப்பியக் கட்டளையால் விளங்கும். வீரர் போர்க்குச் செல்லுங்கால் வெற்றி வேண்டிக் கொற்றவையையும், முருகனையும் பரவத் தேவராட்டியைக் கொண்டு வழிபடுதல் பெரும்பான்மை. அதனைக் கண்ணப்ப நாயனார் புராணத்தாலும் அறியலாம்.)

அடி-229: காடும் - முல்லை நிலத்திலும் (அவ்விடத்து வேண்டினார் பொருட்டு அவன் உறைவன்.) காவும் - சோலைகளிலும் (அங்கு நிறுவினார் வேண்ட உறைவன்) கவின் பெறு துருத்தியும் - அழகு பெற்ற, யாறு பிளவுபட்டு ஓட அவற்றிடை அமைந்த திடல்களிலும் அவன் விரும்பி உறைவன்.)

அடி-230: யாறும் - ஆற்றங் கரைகளிலும். (அவன் உறைவான்) குளனும் - குளத்தங் கரைகளிலும் (அவன் உறைவான் வேறு பல் வைப்பும் - தன்மையால் வேறுபட்ட பல சிற்றூர்களிலும் (அவன் உறைவான்)

அடி-231: சதுக்கமும் - நான்கு தெருக்கள் ஒன்று கூடுகின்ற சந்திகளிலும் (அவன் உறைவான்) சந்தியும் - (மூன்று தெரு, ஐந்து தெரு கூடுகின்ற) மற்றைச் சந்திகளிலும் (அவன் உறைவான்) புதுப் பூ கடம்பும் - (அவனுக்கு மிக விருப்பமாகிய புதிய பூக்களைப் பூத்துக் குலாவுகின்ற கடப்ப மரங்களின் அடிகளிலும் (அவன் உறைவான்)


1. “வேலன்” - அடி 195 உரை பார்க்க.
2. பொருள் - புறத்திணை - வெட்சி.